Monday, March 5, 2012

வ டகிழக்கில் அரசாங்கம் என்ன செய்கிறது? ஐ.நா விற்கு அமெரிக்க தூதர் அறிக்கை.

வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் பல காத்திரமான திட்டங்களை அமுல்ப்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமை பேரவைக்கு விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய

ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை தோல்வியடையச் செய்யும் நோக்குடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சர்வதேச சமூகததிற்கு தெளிவுப்படுத்தவும் தீர்மானிக்கபபட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாத்து சலுகைகளை வழங்கி ஆச்சரியமிக்க இலங்கையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்படடுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, 2009 ஆம் ஆணடு மே மாதம் இலங்கையில் எலிரிரிஈ பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டதன் பின்னர் தமிழர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு திடடங்கள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தினால் இடம்பெயர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மீள்குடியேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உட்கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் உட்பட மேலும் அத்தியவசிய சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நிதியை இம்மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் செலவிடுகிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கபபட்டுள்ளன. 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு தொழில் மற்றும் கலவி தகைமைகளுடன் அவர்களை சமூகமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எல்ரிரிஈ பயங்கரவாதத்தினால் வடகிழக்கில் 30 வருடங்களாக மறுக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டி தேர்தல் நடத்தப்பட்டதுடன் வாக்காளர்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாயப்பும் வடகிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்டன.

26 வருடங்களாக நடைமுறையிலிருந்த அவசர கால சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் சுமூகமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்துச் சென்று வருடாந்த பொருளாதார வளர்ச்சியை 8.4 வீதமாக பேணுவதற்கும் வேலையின்மையை 4.3 வீதமாக குறைப்பதற்கும் அரசாங்கத்தினால் முடிந்தது. உலகில் ஏனைய நாடுகள் பொருளாதார பிரச்சினையில் சிக்கி தவிக்கையில் இலங்கையில் மிக குறைந்த பண வீக்கத்துடனான பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

30 வருடங்களுக்கு பின்னர் வடகிழக்கின் தலா தேசிய உற்பத்தி நூற்றுக்கு 22 வீதமாக அதிகரித்தது. வடகிழக்கை இணைக்கும் வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் மூலம் இவ்விரு மாகாணங்களிலும் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட வழிகோலப்பட்டது.

வடகிழக்கு மக்களுக்கு சுயதொழிலை மேற்கொள்வதற்காக 318 அமெரிக்க டொலர்கள் நிவாரண கடன்கள் வழங்கப்படடதுடன் கடற்றொழில் விவசாயம் , நீர்பாசனம், மற்றும் கைத்தொழில் துறைகளிலும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஏற்படுத்தியது.

தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ் மொழிபேசும் சமூகத்தை அரச பாதுகாப்பு மற்றும் அரச நிருவாக சேவையில் உள்ளீர்ப்பதற்கும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்களை இனங்காண்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கற்ற பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இது போன்ற அங்கீகரிக்க கூடிய சிறந்த திட்டங்களை தமிழ் மக்களுக்காக அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவையென அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரினால் ஐ.நா மனித உரிமை பேரவையில சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com