பாக்.கில் 9 மாதத்துக்கு முன்பு தீவிரவாதிகள் கடத்திய சுவிட்சர்லாந்து தம்பதி விடுவிப்பு
பாகிஸ்தானில் பணத்துக்காக செல்வந்தர்களையும், வெளிநாட்டினரையும் தீவிரவாதிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஜூலை மாதம், பலுசிஸ்தான் மாகாணம் லோரலாய் பகுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி ஆலிவர் டேவிட் (31), தனிலா விட்மரை (29) தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர்.
அவர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றவர்கள். தம்பதிகளை விடுவிக்க வேண்டுமானால், ஆப்கனில் அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்றதாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபியா சித்திக் என்ற பாகிஸ்தான் விஞ்ஞானியை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு மிரான்ஷா நகரில் உள்ள சோதனைச் சாவடி அருகே சுவிட்சர்லாந்து தம்பதிகளை ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் ஹெலிகாப்டரில் பெஷாவர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘இருவரும் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பித்து, சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர்’’ என்றனர். ஆனால் மிகப்பெரிய தொகையை பெற்ற பிறகே இருவரையும் விடுவித்ததாக தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று லாகூரை சேர்ந்த ஆமிர் மாலிக் என்ற தொழிலதிபர் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மருமகன் ஆவார். இவரும் ஆப்கன் எல்லை அருகே மீட்கப்பட்டார். பணம் கொடுத்து மீட்கப்பட்டாரா என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை.
0 comments :
Post a Comment