பெண்கள் தினத்திற்கு காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளனவா???...
திருமதி. பி. லோகேஸ்வரி
ஓவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் முதல் வயோதிபப் பெண்கள் வரை ஏதாவது ஒரு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஏந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயம் எல்லா பெண்கள் மத்தியலும் விடைக்கான முடியாத கேள்வியாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் போது பெண்களின் உடல் நலனில், அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் அல்லது மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பாலின செயலும் மற்றும் இது போன்ற செயல்களை செய்வேன் என்று அச்சுறுத்துவதனையும் குறிப்பிடுகின்றது.
பெண்களாக இருக்கும் காரணத்தினாலேயே எண்ணவோ சித்திரவதை, பட்டினி, பலத்காரம், உளரீதியான பாதிப்பு, அங்கவீனம், கொலை ஆகிய வன்முறைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாராபட்சங்களையும் ஒழிப்பதற்கான சமவாயம் (CEDAW) நிறைவேற்றப்பட்டு 21 வருடங்களாகிய போதும் பெண்களுக்கு எதிரான வன்முறையானது தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே இருப்பதானது
இச்சமவாயத்தின் பங்களிப்பினை தெளிவுப்படுத்துகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களின் உடல்நலக் கோளறுகளுக்கும்,பெண்களின் மரணங்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறையானது பாலியல் மற்றும் இனப்பெருக்க நலனுடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த தொடர்பை பயன்படுத்திதான் ஆணாதிக்க அதிகார சக்திகள் பெண்களின் உடல் மேல் உரிமை கொண்டாடி,அவர்கள் மீது வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறையானது பெண்கள் பிறப்பதற்கு முன்பிலிருந்து அவர்களது ஆயட்காலம் முழுவதும் தொடர்கின்றது எனலாம். பிறப்பிற்கு முன்பு எனும் போது குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்கு அமினோசென்டிஸிஸ் எனும் ஒரு சோதனை முறையைக் கையாண்டு பெண்கருக்களைக் கலைக்கும் முறை காணப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவல் உள்ள பம்பாயில் 99 சதவீதமான பெண்கரு இவ்வாறு அழிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து பிள்ளைப்பருவத்தில் பெண்பிள்ளைகளுக்கு குறைவாக உணவு ஊட்டப்படுவதுடன், சிறிது காலம் மட்டுமே தாய்ப்பால் மருத்துவ வசதி கிடைக்கப் பெறுகின்றது. இதனால் பெண்பிள்ளைகள் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பெண்கள் வளர்ந்த பின் இறக்கும் வரைக்கும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். அதாவது பெண்களுக்கு தமது இனப்பெருக்கத்தில் எத்தகைய உரிமையும் இல்லாமை, வறுமையும் மோசமான சுகாதார நிலமைகளும் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்,சீதனக் கொடுமை, பலத்காரம் என்று வன்முறைகள் ஆயட்காலம் முழுவதும் தொடர்கின்றன.இத்தகைய வன்முறைகளானது வர்க்கம், இனம். தேசம் ஆகிய வேறுபாடின்றி இடம்பெற்று வருகின்றன எனலாம்.
பெண்களுக்கு எதிரான வன்முறையானது சர்வதேச ரீதியில் ஒவ்வொரு செக்கனுக்கும் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்று வருவதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக அமெரிக்காவில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு தடைவ ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுகின்றமை இங்கு எடுத்துக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
சர்வதேச ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒப்பீடும் போது மூன்றாம் உலக நாடுகளிலேயே ஏனைய முதலாம் மற்றும் இரண்டாம் உலக நாடுகளைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது எனலாம். ஏன்எனின், மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் கல்வி அறிவு குறைந்த மட்டத்தில் உள்ளமை, ஆண்களில் தங்கியிருக்கும் நிலமை, கலாச்சாரம் என்ற அடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட நிலமை போன்ற காரணிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து செல்ல காரணமாக உள்ளது.
அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இலங்கையில் மேற்குறிப்பிட்டக் காரணிகளினாலேயே அதிகமானப் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறையானது இலங்கையில் வாழும் ஏனைய சமூகப் பெண்களைவிட அதிகமாக உள்ளது. காரணம் பெருந்தோட்டத்துறை பெண்களின் கல்வி நிலை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளமை இவர்கள் இலகுவில் வன்முறைக்கு உட்படுவதற்கு சாதகமானதாக அமைகின்றது.
அதாவது இவர்கள் மத்தியில் வன்முறைத்தொடர்பான தெளிவின்மை இக்குறைந்த மட்டத்திலான கல்வியினாலேயே ஏற்படுகின்றது. இதனால் பெருந்தோட்டத்துறை பெண்கள் தாம் வன்முறைக்கு உட்படுகின்றோம் என்பதனை அறியாமலே வன்முறைக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறையானது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுவதுடன், பெருந்தோட்டத்துறையில் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் பெண் சமுதாயத்திற்கு அடிப்படைக் கல்வியை வழங்குவது மற்றுமொரு அத்தியாவசியத் தேவைப்பாடாக உள்ளது.
பெருந்தோட்டத்துறை பெண்கள் ஆண்களில் தங்கியிருப்பது என்பது பெருந்தோட்ட சமூக ரீதியாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அம்சமாகும். இதுவே பெருந்தோட்டத்துறை பெண்கள் வன்முறைக்கு ஆளாகும் இக்கட்டான நிலையில் உள்ளதைப் புரிந்துக் கொள்ள போதுமானதாகும். இவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலேயே தங்கியுள்ளனர்.
குறிப்பாக பெருந்தோட்டத்துறை பெண்களினது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப் படுவதில்லை, அத்தோடு அதிக நேரம் குறைந்த ஊதியத்திற்கு வேலைச் செய்யவேண்டி ஏற்படுகிறது, அதிலும் குறைந்த வசதிகளிடையே ஆண்களைவிட பாதுகாப்புக் குறைந்த சூழ்நிலையிலும் வேலைச் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு இவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதுடன்,இவர்களின் உழைப்பு தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகின்றமையை நாம் அவதானிக்க முடியும்.
பெருந்தோட்டத்துறை பெண்கள் கலாச்சார ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றமை மற்றுமொரு முக்கிய விடயமாகக் காணப்படுகின்றது. பெருந்தோட்டத்துறை பெண்கள் ஆற்றல்,அவர்களின் மதிப்பு ஆண்களையும் அவர்களது வாழ்க்கையையும் சார்ந்தே உள்ளதாக நம்புவதற்கு அவர்கள் கலாச்சார ரீதியாக பழக்கப்பட்டுள்ளார்கள். தந்தையை, சகோதரனை. கணவனை அல்லது மகனைச் சார்ந்தே பெண்கள் வாழவேண்டுமென பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆண்களுக்கு பணிந்து நடக்கவிட்டாலோ, கட்டுப்பட்டு நடக்க மறுத்துவிட்டாலோ கலாச்சார ரீதியாக மட்டுமல்லாமல் சமுதாய ரீதியாக ஒதுக்கப்படுகின்றனர். கலாச்சார ரீதியாக பெண் என்பவள் தனது சொந்த திறமைகளையும், ஆற்றல்களையும் மற்றவர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற உதவுவதில் திருப்தி காணும்படி பெருந்தோட்டச் சமூகத்தில் வளர்க்கப்படுகின்றனர். இதனால் ஆண்கள் இவர்களை அடித்தால் அது தமது குறைப்பாட்டினால் அல்லது தமது தவறுக் காரணமாகத்தான தண்டிக்கப் படுகின்றோம் என தம்மீதே தவறைப்போட இவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வகையில் பெருந்தோட்டத்துறை பெண்கள் கலாச்சார ரீதியாக வன்முறைக்கு திணிக்கப்படுகின்றனர்.
பெருந்தோட்டத்துறை பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பெண்களேக் காரணமாகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக வன்முறைக்கு உள்ளாகும் நூற்றுக்கு 90 வீதமான பெண்கள்; பெரும்பாலும் பெண்களாலேயே பெருந்தோட்ட சமூகத்தில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர என்ற தகவலே அது. பெருந்தோட்டத்துறை பெண்கள், சித்திரவதை, பட்டினி, உளரீதியான பாதிப்பு, அங்கவீனம், கொலை மற்றும் சீதனக் கொடுமை என்பவற்றை மற்ற பெண்களின் மூலமாகவே உட்படுத்தப்படுகின்றனர்.
எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கு பெண்களே முதலில் முன்வரவேண்டிய நிலமையானது பெருந்தோட்த்துறைச் சமூகத்தில் மாத்திரமல்லாமல் இலங்கையின் ஏனைய சமூகங்களிலும் ஏற்படுத்த வேண்டியது தற்கால தேவைப்பாடாக உள்ளது.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஓர் சமூகத்தை மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்தியே பாதிக்கும் பிரச்சினையாகும். எனவே இவ்விடயத்தில் சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலும் இதனைத் தடுக்கும் வகையிலும், இல்லாதொழிக்கும் வகையிலும் கொள்கைகள்; வகுக்கப்பட்டு அதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும்.
குறிப்பாக ஒடுக்கமுறையினூடாக பெண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும், சமூகத்தில் அவர்களது பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளை நிறுத்த இவை உதவ வேண்டும். பெண்களுக்கு எதிராக தவறாக நடப்பவர்களுக்கு கல்வி, மறுகல்வி வசதிகள் ஏற்படுத்துவதனூடாக அவர்களுக்கு இப்பிரச்சினையின் தாக்கம் தொடர்பான அறிவு புகட்டப்பட வேண்டும்.
0 comments :
Post a Comment