தருஸ்மன் அறிக்கையை நிராகரித்து LLRC பரிந்துரைகளை அமுல்படுத்தக்கோரும் அமெரிக்கா
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க உதவி செயலாளர் மரியா ஒட்டேரோ மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் என பலதரப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.
பின்னர் தமது நிலைப்பாடு தொடர்பாக விளக்குகையில், இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை இலங்கை விளக்குவதற்கு அதற்கு ஒரு வாய்ப்புத் தரக்கூடிய ஒரு தீர்மானத்தை தாம் மார்ச் மாதத்தில், ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா ஆதரிக்கும் என்று இலங்கைக்கு மரியா ஒட்டேரோ கூறியுள்ளார்.
பல்வேறுபட்ட மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து வந்தநிலையில் , ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானமானது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று என அழுத்தம் கொடுப்பதற்கானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அத்தகைய தீர்மானம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கரிசனைகள் ஆகியவற்றுக்கும் வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் மரியா ஒட்டேரோ கூறியுள்ளார்.
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளை பாராட்டியுள்ள ஒட்டேரோ, அதன் பரிந்துரைகளில், பொறுப்புக்கூறல் குறித்து சில குறைபாடுகள் இருக்கின்ற போதிலும், பல முக்கிய விடயங்களில் அது கவனம் செலுத்தியிருப்பதாகவும், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, இராணுவ மயமாக்கலை குறைப்பது மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் போன்ற விடயங்களில் அது கணிசமான பரிந்திரைகளை செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அது அமல்படுத்தப்பட்டால், உண்மையான நல்லிணக்கம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைகளை பலப்படுத்தல் ஆகியவற்றில் அது நல்ல பங்களிப்பை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜனாதிபதி தம்மிடம் கூறியுள்ளதாகவும் ஒட்டேரோ குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோ என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பேசிய அவர், 'ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் கலந்துரையாடினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை தொடர்பிலான திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்' என ஒட்டேரோ தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நம்பகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியான ஒட்டேரோ குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர் கரிசனை தெரிவித்தார்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பொறுப்புக் கூறலை முழுமையாக ஆராய வேண்டும் என பிரகடணப்படுத்தப்படும் பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்தார்.
சர்வதேசத்தில் மட்டத்தில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டம் ஏதாவது அமெரிக்கவிடம் உள்ளதா என வினவியதற்கு, தற்போது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பிலேயே கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் நம்பகமான உள்ளூர் பொறிமுறை ஏற்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம் என பிளெக் தெரிவித்தார்.
உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதில் ஏதாவது குறைகள் காணப்படுமாயின் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் நிச்சயம் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்
'அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையானது தேசிய பிரச்சினைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும்.
தற்போது, அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை நல்லமுறையில் நிறைவு பெற அமெரிக்கா உதவும். அவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment