Saturday, February 11, 2012

கொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.

சிறிலங்காப் போரினால் உடலுறுப்புகள் இழந்தோரும் அவர்களுக்கான புனர்வாழ்வும்?

இறந்து விட்டேன் என பிரேத அறையில் போடப்பட்டிருந்த நான் அணுகியதை அடுத்து வாட்டுக்கு கொண்டுவரப்பட்டேன், என்னால் குரல்களை கேட்க முடிந்தது ஆனால் பார்க்க முடியவில்லை. குமாரதாஸன்

புலிகள் ஆட்களை பிடிக்கின்றார்கள் என பெற்றோர் சிறுவயதில் திருமணம் செய்து தந்தனர். ஆனாலும் அவர்கள் பிடித்துச் சென்றார்கள்,
இரண்டுதடவைகள் தப்பி ஓடினேன் பிடித்துச் சென்றார்கள், முன்னறாம் தரம் ஓடினேன் சுட்டார்கள் , அதுமட்டும் தெரியும் தற்போது எனது கணவர் என்னை நன்றாக பார்கின்றார். ஆனால் அவருக்காக என்னால் எதையும் செய்ய முடியவில்லை. சிவகுமாரி

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தங்கியிருந்த 218,773 பேரில் 4912 பேர் யுத்த காலப்பகுதியில் தமது உறுப்புக்களை இழந்தவர்களாவர் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சால் 2009 ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு Global Press Institute என்னும் மகளிர் ஊடகவியலாளர் பயிற்சி நிறுவனத்தின் இணையத்தளத்தில் அதன் செய்தியாளர் Anuradha Gunarathne எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை இணையத்தளம் ஒன்றுக்காகப மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையில் முழுவிபரமாவது

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பத்தாண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல் ஒன்றில் காயமடைந்த 39 வயதுடைய தியாகலிங்கம் குமாரதாசன் தனது கண் பார்வையை இழந்தார்.

சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றிலே குமாரதாசன் தனது மனைவியுடனும் 18 மாதங்கள் நிரம்பிய தனது மகளுடனும் வாழ்ந்து வருகிறார். கண் பார்வையை இழந்துள்ள காரணத்தினால் குமாரதாசன் வேலைக்குச் செல்வதில்லை.

இவர் தனது கண் பார்வையை இழப்பதற்கு முதல், வைத்தியராக வருவதற்கான கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். பாரம்பரிய மருத்துவக் கல்வியைக் கற்பதில் விருப்பம் கொண்டிருந்த குமாரதாசன், பிறிதொரு மாவட்டமான முல்லைத்தீவில் பணியாற்றிய பாரம்பரிய வைத்தியர் ஒருவரிடம் மருத்துவக் கல்வியைக் கற்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால் அந்த ஆண்டிலேயே வைத்தியராக வரவேண்டும் என்ற அவரது கனவும் முடிவிற்கு வந்தது.

"1992 ல் குறிப்பிட்ட அந்த நாளில் நடந்தது என்ன என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது" என குமாரதாசன் தெரிவித்தார். "அப்போது முல்லைத்தீவில் செறிவாக வீசப்பட்ட எறிகணைகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் தனக்கு என்ன நடந்ததென்பதைத் தன்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடியாதிருந்ததாக அவர் தெரிவித்தார். இவ்வாறு இவ் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த குமாரதாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர் மயக்கநிலை தெளிந்து எழுந்த போது வீறிட்டுக் கத்தியதாகவும், அந்த வேளையில் மிகவும் வலியுடன் இருந்த இவரது உடலை சிலர் தொடுவதை உணரமுடிந்ததாகவும், ஆனால் அவர்களின் உருவங்களைத் தன்னால் பார்க்க முடியவில்லை எனவும் குமாரதாசன் குறிப்பிட்டார்.

"சிலரின் குரல்களை மட்டும் என்னால் கேட்க முடிந்தது. சிலர் வந்து என்னுடன் கதைத்தார்கள். ஆனால் அவர்கள் எதைப்பற்றி கதைக்கின்றார்கள் என்பதை என்னால் நினைவுபடுத்தி பார்க்க முடியாமல் இருந்தது. அப்போதும் எனக்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது" எனவும் குமாரதாசன் மேலும் தெரிவித்தார்.

"சம்பவம் நடந்த பின்னர் நான் இறந்து விட்டதாகக் கருதி ஒரு சில நாட்களாக எனது உடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் போட்டிருந்ததாக, மருத்துவமனைப் பணியாளர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்" என குமாரதாசன் விபரித்தார்.

"எனக்கு உயிர் இருக்கின்றது என்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. நான் முனகிய சத்தம் கேட்ட போதே பிரேத அறையில் நின்றிருந்த பணியாளர்களுக்கு நான் இறக்கவில்லை என்ற விடயம் தெரியவந்தது. அதன்பின்னர் அவர்கள் உடனடியாக என்னை நோயாளர் அறைக்கு அனுப்பி வைத்தார்கள்" என அவர் தான் பெற்றுக் கொண்ட அனுபவத்தை விளக்கினார்.

"ஆனால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. எறிகணை எனது கண்களைப் பதம் பார்த்துள்ளது என்பதை அதன் பின்னரே உணர்ந்து கொண்டேன்" எனவும் குமாரதாசன் தெரிவித்தார்.

இவரது கண் பார்வையை மீளவும் கொண்டு வரும் முயற்சியில் சத்திரசிகிச்சைகள் பல மேற்கொண்ட போதிலும், இவரது கண்கள் பலத்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால் பார்வையைக் கொண்டு வர முடியவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குமாரதாசன் 2008 ல் திருமணம் செய்து கொள்ளும் வரை இவரை இவரது தந்தையாரே பராமரித்து வந்தார்.

"எனது தந்தையார் எனது குடும்பத்தைப் பராமரிப்பதற்காக மாதம் தோறும் ரூபா 5000 (45 டொலர்) தருகின்றார்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். செப்ரெம்பர் 2008 தொடக்கம் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட ஏப்ரல் 2009 வரை, குமாரதாசனும் அவரது குடும்பத்தவர்களும் ஏழு தடவைகள் இடம்பெயர்ந்திருந்தனர்.

இறுதியில், வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இராமநாதன் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கண்கள் பார்வை இழந்திருந்ததால் இடப்பெயர்வின் போது தான் பெரிதும் துன்பப்பட்டதாக குமாரதாசன் குறிப்பிட்டார்.

"இடம்பெயர்ந்த காலப்பகுதியில், எனது மனைவி கர்ப்பமுற்றிருந்தார். ஆனால் எனது மனைவி தான் பட்ட எல்லா வலிகளுடனும் எனக்குத் தேவையான உதவிகளையும் நிறைவேற்றினார். நாங்கள் இறுதியில் இரண்டு கிலோமீற்றர் தூரத்தை நீரால் நிரம்பியிருந்த இடத்தின் ஊடாக நடந்து கடக்க வேண்டியிருந்தது. அதன் பின்னர் நாங்கள் பேருந்தில் பயணித்தோம்" எனவும் அவர் தாம் பட்ட துன்பங்களை எடுத்துக் கூறினார்.

குமாரதாசன் குடும்பம் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த போதே, குமாரதாசனின் மகள் பிறந்திருந்தார்.

"நான் எனது மகளினதும், மனைவியினதும் முகத்தைப் பார்க்க மிக்க ஆவலாய், விருப்பமாயிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அவர்களுக்காக என்னால் எதையும் செய்ய முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் குறைந்தது தனது வாழ்வில் மனைவி, மகளுடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

"தற்போது எனது சிறிய மகள் என்னை 'அப்பா' என அழைக்கின்ற போது, எனது மகளின் குரலையாவது என்னால் கேட்க முடிகின்றதே என எண்ணி நான் மகிழ்வடைவேன்" எனவும் குமாரதாசன் மேலும் தெரிவித்தார்.

சிறிய மகள் காயமடைந்த தனது கண்களைப் பார்ப்பதை விரும்பாத குமாரதாசன் எப்போதும் கறுப்புக் கண்ணாடியை அணிந்திருப்பதாகவும் கூறினார்.

இவரது மனைவியான கமலினி குமாரதாசன் மெல்லிய, இளைய, துணிந்த ஒரு பெண்ணாவார். தனது கணவர் எப்போதும் சௌகரியமாக இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இவர் தனது கணவனின் முக வெளிப்பாடுகளையே பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார்.

"நாங்கள் யூன் 19, 2010ல் மீளவும் இக்கிராமத்திற்கு வந்தோம். இது எனது சகோதரியின் நிலம். நாங்கள் தற்காலிகமாகவே இங்கு குடியேறியுள்ளோம். இத் தற்காலிக கொட்டகையை அமைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று எமக்கு உதவி புரிந்துள்ளது. எனது கணவரையும், மகளையும் பராமரிப்பதில் எமது உறவுகள் எனக்கு ஒத்தாசையாக உள்ளனர்" எனவும் கமலினி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் பொதுமக்களிற்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவை குமாரதாசன் பெறுகின்றார். ஆனால் வலுவிழந்தவர்களுக்காக வழங்கப்படுகின்ற மேலதிக இழப்பீடுகள் எதையும் இவர் பெறவில்லை எனவும், குறிப்பிட்ட எறிகணைத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்ததை உறுதிப்படுத்துவதற்கான காவற்துறை அறிக்கை தன்னிடம் இல்லாமையே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தமையால், இம் மாவட்டங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் காவற்துறை நிர்வாகச் செயற்பாடுகள் நடைபெறவில்லை.

ஆனால் தற்போது சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ள குமாரதாசன் தற்போது இழப்பீட்டுத் தொகைக்காக காத்திருக்கிறார்.

சிறிலங்காவில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட யுத்தம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுற்ற போதிலும், யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பெரும்பாலானவர்கள் தமது நாளாந்த வாழ்வில் பல கடினங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாண்டில் இடம்பெயர்ந்த மக்களிற்கான கல்வி மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் இழப்பீட்டு உதவிகளும், வாழ்வாதார மேம்பாட்டுக்கான தொழில் வாய்ப்புக்களுமே இந்த மக்களின் தற்போதைய தேவைப்பாடாக உள்ளது. இதன் மூலமே இவர்கள் தமது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முப்பது ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தால், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததாக உள்ளுர் ஊடகத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் தொகை 800,000 என ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயம் மதிப்பிட்டுள்ளது.

2009ல் விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக அழித்த சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால் யுத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், நிலக்கண்ணி வெடிகள், படுகொலைகள் போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்களின் வாழ்வு இன்னமும் மாற்றமடையவில்லை.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தங்கியிருந்த 218,773 பேரில் 4912 பேர் யுத்த காலப்பகுதியில் தமது உறுப்புக்களை இழந்தவர்களாவர் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சால் 2009 ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது குமாரதாசன் போன்று வலுவிழந்தவர்களில் 2000 பேர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

யுத்தத்தின் போது காயமடைந்து தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ள 25 வயதான திருச்செல்வம் சிவகுமாரி சக்கர நாற்கலியிலேயே தனது வாழ்வைக் கழிக்கின்றார்.

"என்னால் நடக்க முடியாது. எனது வேலைகளைக் கூட என்னால் செய்ய முடியாது. ஒவ்வொரு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நான் எனது கணவரையே நாடவேண்டியுள்ளது" என அவர் தெரிவித்தார்.

யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் புலிகளது அமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இந்நிலையில் ஆண் சகோதரர்களைக் கொண்டிராத சிவகுமாரி புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பிற்குள் உள்வாங்கப்பட்டார். இவர் குடும்பத்தின் மூத்த பிள்ளையாவார்.

புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதில் சிவகுமாரி விருப்பமற்றிருந்ததால், சிவகுமாரியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தமது மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் புலிகளின் ஆட்சேர்ப்பிலிருந்து சிவகுமாரியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என அவர்கள் நினைத்தனர்.

சிவகுமாரி தனக்கு நேர்ந்த அவலத்தை எடுத்துக் கூறிய போது அவரது முக உணர்வுகள் மாற்றமடைந்ததுடன், இவர் அழத் தொடங்கினார்.

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பின் கீழ் கொண்டு செல்லப்பட்ட சிவகுமாரி அங்கு ஒரு மாத காலம் வரை மட்டுமே பயிற்சி எடுத்திருந்தார். அதன் பின்னர் இவர் தனது வீட்டிற்கு தப்பி ஒடிச்சென்ற போதும், ஒரு நாள் கழித்து வந்த புலி உறுப்பினர்கள் மீளவும் சிவகுமாரியை பலவந்தமாகக் கொண்டு சென்று பயிற்சி வழங்கினர்.

"அது மிகக் கடினமான பயிற்சியாக இருந்தது. அவர்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். ஆனால் நான் அங்கு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எனது கணவர் மற்றும் எனது பெற்றோர் என்னுடன் இருக்காததால் அது எனக்கு மகிழ்வைத் தரவில்லை" என சிவகுமாரி மேலும் தெரிவித்தார்.

மூன்று நாட்கள் கழிந்த பின்னர் மீளவும் அங்கிருந்து தப்புவதற்கான முயற்சியில் இறங்கியபோதும், புலிகள் மீண்டும் சிவகுமாரியைப் பிடித்து கட்டாயப் பயிற்சி வழங்கினர். அதன் பின்னர் ஒரு நாள் கழித்து இவர் பயிற்சி இடத்தை விட்டு ஓடத் தொடங்கினார். அந்த வேளையில் இவர் மீது புலிகள் சுடத் தொடங்கினர்.

"அவர்கள் என்னைச் சுட்டார்கள். அதை மட்டுமே என்னால் நினைவுபடுத்த முடிந்தது. நான் கண் விழித்துப் பார்த்த போது, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். எனது முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் மீளவும் என்னால் நடக்க முடியவில்லை. பல சத்திர சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், வைத்தியசாலையில் 2.5 மாதங்களைக் கழித்த போதிலும் அவை எனக்கு எவ்வித பயனையும் தரவில்லை. தற்போதும் நான் சக்கர நற்காலியில் வாழ்கிறேன்" என சிவகுமாரி கண்ணீர் வழிந்தோட வேதனையுடன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2008 ல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அத்துடன் எனக்கான சோதனைகள் நிறைவு பெறவில்லை.

"பெப்ரவரி 2009ல் நாங்கள் இடம்பெயரத் தொடங்கினோம். வெவ்வேறு நான்கு இடங்களுக்கு நாம் இடம்பெயர்ந்தோம். மே 2009 ல் வவுனியா முகாமைச் சென்றடைந்தோம். இந்தச் சம்பவங்களை நினைவுபடுத்த நான் விரும்பவில்லை. நாம் வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றபோது, எனது கணவர் பல துன்பங்களை எதிர்கொண்டிருந்தார். என்னை அவர் மட்டுமே காவிச் சென்றார். ஆனால் நான் அவருக்காக எதையும் செய்ய முடியவில்லை" என சிவகுமாரி அழுகையுடன் கூறினார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிடமிருந்தே இவர் தனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக் கொண்டார். இவரது வீட்டில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதற்கான உதவிகளை சமூக சேவைகள் திணைக்களம் வழங்கியது. இவரது குடும்பம் புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உதவிபுரிகின்றன. மற்றவர்கள் நடந்து திரிந்து தமது நாளாந்தப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும் போது தான் மனக்குழப்பம் அடைவதாகவும் சிவகுமாரி தெரிவித்தார்.

வலுவிழந்தவர்களைப் பாதுகாத்து, ஆதரவளித்து அவர்களின் உரிமைகளைக் காப்பதற்கான சட்டம் ஒன்று சிறிலங்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுடன் 'வலுவழந்தோர்களுக்கான தேசிய சபை' ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

2003 ல் சிறிலங்கா அரசாங்கமானது 'வலுவிழந்தோர்களுக்கான தேசிய கொள்கைத் திட்டம்' ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இவர்களுக்கான வசதிகளை உயர்த்துவதற்கான நடைமுறைகள் 2006 ல் சிறிலங்கா நாடாளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

யுத்தம் முடிவுற்ற பின்னர், வடக்க மாகாணத்தில் உள்ள வலுவிழந்த மக்களுக்கான சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வலுவிழந்த மக்களுக்கான ஆளுமையை விருத்தி செய்து அவர்கள் தமது நாளாந்தப் பணிகளைத் தாமாகவே பூர்த்தி செய்து கொள்வதற்கான பயிற்சியை தமது நிறுவகம் வழங்கி வருவதாக, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக மட்ட புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சாந்த குமார தெரிவித்துள்ளார்.

"இத்திட்டத்தின் கீழ் சிறிலங்கா முழுமையும் 1997 -2011 வரையான காலப்பகுதியில் 8700 தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். இத் தொண்டர்கள் சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வலுவிழந்தவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருவதுடன், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்" எனவும் சாந்த குமார தெரிவித்தார்.

"இத் தொண்டர்களால் ஆற்றப்படும் சேவைகள் கிட்டத்தட்ட 30,000 வலுவிழந்தோரைச் சென்றடைந்திருக்கும் என நான் நம்புகின்றேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"வலுவிழந்த சிறார்களுக்கு சிறப்புக் கல்வித்திட்டத்தை வழங்குவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சிலவற்றில் 10 கல்விப் பிரிவுகளை திணைக்களம் உருவாக்கியுள்ளது. அத்துடன் சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 10 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என வடக்கு மாகாணத்தின் கல்வித் திணைக்களத்தின் சிறப்புக் கல்விக்கான மாகாண ஒருங்கிணைப்பாளர் நிசாந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

"இச்சிறப்புக் கல்விப் பிரிவின் கீழ் வலுவிழந்த அனைத்து சிறார்களையும் உள்வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இச்சிறார்களின் பெற்றோர் வலுவிழந்த தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப விரும்பாததால் இது பெரியதொரு பணியாக உள்ளது. தமது பிள்ளைகள் கல்வி கற்க முடியாது என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை வெற்றி கொள்வதற்காக வலுவிழந்த பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது. அத்துடன் வலுவிழந்த சிறார்கள் கல்வி உரிமையைப் பெற்றுக் கொள்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம்" எனவும் நிசாந்தி பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

இச்சிறார்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2011 ல் தமிழ் மொழி மூலம் 41 ஆசிரியர்களும் சிங்கள மொழி மூலம் 40 ஆசிரியர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் சிறப்புக் கல்விப் பிரிவின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களிலும் வலுவிழந்த மக்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, புதிதாகக் கட்டப்படும் தொடருந்துப் பாதை மற்றும் நீதிமன்ற கட்டுமானப் பணிகளில் வலுவிழந்த மக்களின் நலன்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வலுவிழந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கச் செயலகம், உள்ளுர் அரசாங்க அமைப்புக்களுடன் இணைந்து தகவல்களை சேகரித்து வருகின்றது. இந்நிலையில் இழப்பீடு மற்றும் வாழ்வாதார தொழில் வாய்ப்புக்கள் போன்றனவே தற்போது தமக்கான இன்றியமையாத தேவையாக உள்ளதாக யுத்தத்தின் போது வலுவிழந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com