Sunday, February 12, 2012

ஜனாதிபதியின் பாக் விஜயம் : மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் முடிந்தது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நேற்று முன்தினம் ஆரம்பித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் பல்வேறுப்பட்ட துறைகளில் பயன்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இரு நாடுகளும் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரியக்கிடைக்கின்றது.

சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம், தொழினுட்ப கல்வி, ஊடகம் போன்ற துறைகளில் மேலும் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு சனிக்கிழமை இரு நாடுகளும் மூன்று வெவ்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் சையித் யூசுப் ஜிலானி மற்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமர் இல்லத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இக்கைச்சாத்து நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களினதும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஊடகத் துறையில் இரு தரப்பு உறவுகளையும் மேலும் அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கையில் பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கான மத்திய அமைச்சர் கலாநிதி Firdous Aishaq Awanம், சிறிலங்கா சார்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் கையெழுத்திட்டனர்.

இரு நாடுகளின் வர்த்தகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும், சிறிலங்காவிலிருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதிச் செயற்பாடுகளை மேலும் முன்னேற்றுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக முன்வைக்கப்பட்டு இரு தரப்புக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டாவது புரிந்துணர்வு உடன்படிக்கையில் பாகிஸ்தான் சார்பாக, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் பிரமரின் ஆலோசகராகக் கடமையாற்றும் கலாநிதி அப்துல் கசீப் செய்க்கும், சிறிலங்கா சார்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கைச்சாத்திட்டனர்.

தொழினுட்ப பயிற்சிகளை பல்வேறு வழிகளில் வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்குடன் இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்றாவது உடன்படிக்கையில், பாகிஸ்தான் சார்பாக தொழில்சார் மற்றும் தொழினுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் காமர் சாமன் சாத்திரியாலும் சிறிலங்கா சார்பாக அந்நாட்டு அதிபரின் சௌலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தொழில் சார் மற்றும் தொழினுட்ப பயிற்சி ஆணையகத்திற்கும் சிறிலங்காவின் தொழில் சார் கல்வி ஆணையகத்திற்கும் இடையில் தொடர்பைப் பேணுவதை அடிப்படையாகக் கொண்டே இப்புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

No comments:

Post a Comment