எரிபொருள் விலைகளை குறைக்குமாறு கோரி மீனவர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்
எரிபொருள் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை குடாப்பாடு மற்றும் போருதொட்ட பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமும் வீதிமறியல் போராட்டமும் இன்று காலை முதல் நகரின் பிரதான வீதிகளுக்கும் பரவியது
நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி குடாப்பாடு, ஏத்துக்கால கொச்சிக்கடை ,வென்னப்புவ , மாரவில, சிலாபம் , ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகளில் வீதிகளை மறித்து இன்று மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டனர்.
மீனவர்கள் பலர் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது .வீதிகளில் டயர்களை எரித்தும்; சிறிய மீன்பிடி படகுகளை வீதியில் இட்டு எரித்தும் பாரிய மரக்கட்டைகளையும் ,கொங்கிரீட் தூண்களையும் வீதிகளில் தடைகளாக இட்டும் , கனரக வாகனங்களையும் அரசாங்க போக்குவரத்து பஸ்களையும் வீதியில் குறுக்காக நிறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வீதியை முற்றாக மறித்ததுடன் , மீனவர்களும் வீதிக்கு குறுக்காக அமர்ந்னர்.
இதன் காரணமாக வீதிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. பாடசாலை சென்றுள்ள மாணவர்களை திருப்பி அழைத்து வருவதற்கு மாத்திரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களுக்கு அனுமதியளித்தனர்.
இது தொடர்பாக வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவிக்கையில்,
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவும் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்னவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்தனர். இதன் போது நாளை (இன்று) முதல் பழைய (முன்னர் இருந்த ) விலைகளுக்கே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் .இது தொடர்பாக ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும் ,இதன் காரணமாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் கலைந்து செல்லுமாறும் குறிப்பிட்டனர் .
ஆயினும் இன்றைய தினம் அவர்கள் குறிப்பிட்டது போல் எரிபொருள் விலைகள் முன்னர் இருந்த விலைகளுக்கு குறைக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாகவோ வேறு எந்த வகையிலும் அறிவிக்கப்படவில்லை .இதனை அடுத்தே(இன்று) தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தோம்.
மண்ணெண்ணை விலை இந்த முறை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுஇதற்கு முன்னர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது .ஆகவே 45 ரூபாவால் அதன் விலை குறைக்கப்பட வேண்டும் .
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் வரையில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லப் போவதில்லை என்றனர் .
.
இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் புகையிரத போக்குவரத்துக்கும் தடையை ஏற்படுத்தியதை அடுத்து நீர்கொழும்பு ரயில் நிலையத்தினூடாக செல்லும் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டன .
நீர்கொழும்பு , கொச்சிக்கடை பிரதேசங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை அவதானிக்க முடிந்தது.
நீர்கொழும்பு - சிலாபம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதை அடுத்து தூர இடங்களிலிருந்து பயணித்த பயணிகள் பஸ்கள் இன்றி செய்வதறியாது நிற்கதி நிலையில் இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment