"ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம், இஸ்ரேலுக்கு இல்லை" வளைகுடா பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த ராணுவ நடவடிக்கையும், எண்ணெய் விலை உயர்வுக்கு வழி வகுத்து விடும்'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அந்நாட்டின் மீது, பல நாடுகள் பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ளன. ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போவதாக, செய்திகள் வெளியாயின.
இது குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான், அணு ஆயுதங்களை பெறுவதை தடுக்க, எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடையை அமல்படுத்தியுள்ளன. ஈரானை தண்டிக்க, இந்த நடவடிக்கையே போதுமானது. ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து, இஸ்ரேல் இதுவரை முயற்சி ஏதும் செய்யவில்லை.
அமெரிக்காவின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஈரான் விஷயத்தில், இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். வளைகுடா பகுதியில், எந்த ராணுவ நடவடிக்கை மேற்கொண்டாலும், அது எண்ணெய் விலையை உயர்த்த வழி ஏற்படுத்தி விடும். எனவே, ஈரானுடனான பிரச்னையை, தூதரக மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள முயற்சித்து வருகிறோம்.
2வது முறை போட்டி : அமெரிக்கத் தேர்தலில், இரண்டாவது முறை போட்டியிட, எனக்கு தகுதி உள்ளது என நம்புகிறேன். என்னுடைய முதல் கட்ட அதிபர் பதவியில் நிறைவேற்ற முடியாத விஷயங்களை, குறிப்பாக பொருளாதார மேம்பாட்டு விஷயங்களை, இரண்டாவது கட்ட தேர்தலின் மூலம், பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
No comments:
Post a Comment