Thursday, February 9, 2012

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியினதும் குடும்பத்தினதும் நலனில் ஜனாதிபதி அக்கறை

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மொஹமட் நஷீட்டின் பாதுகாப்பு குறித்து விசாரித்தாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மனைவியும் மகள்களும் கொழும்பை வந்தடைந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நீதிபதியொருவரை கைது செய்ததையடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதி பதவியிலிருந்து மொஹமட் நஷீட் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னரும் அங்கு மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொஹமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் ஹஸனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி வாஹிட் ஹஸன் சம்மதித்தாகவும் பந்துல ஜயகேர கூறினார்.

இதவேளை, பொலிஸாரினாலும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட 'புரட்சியொன்றின்போது' ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் துப்பாக்கிமுனையில் நிர்ப்பந்திக்கப்பட்டதாக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

. பொலிஸாரினதும் படையினரதும் இந்நடவடிக்கையை நஷீட்டின் கீழ் உப ஜனாதிபதியாக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மொஹமட் வாஹீட் ஹசன் மணிக் அறிந்திருந்தார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கூறியுள்ளார். எனினும் இதை ஜனாதிபதி மொஹமட் வாஹீட் ஹசன் மறுத்துள்ளார். இதேவேளை, மொஹமட் நஷீட்டை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக நஷீட் உட்பட மாலைதீவு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மாலேயில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் குண்டாந்தடி மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதால் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டள்ளது.

மொஹமட் நஷீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் தூரப்பிரதேசங்களிலுள்ள சில பொலிஸ் நிலையங்களையும் கைபற்றியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மொஹமட் நஷீட்டை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 தீவுகளை மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தன்னை கைது செய்ய மாலைத்தீவு பொலிஸார் தயாராகி வருவதாகவும் தான் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் இலங்கை ஊடமொன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

'என்னை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருகின்றனர். கைதுக்கு நானும் தயாராகவே உள்ளேன். எனது நட்பு நாடுகளிடம் நான் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன். மாலைத்தீவில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் அந்த ஊடகத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment