Sunday, February 26, 2012

கம்பஹா மாவட்ட ஆழ் கடல் மீனவர்கள் இன்று முதல் கடற்றொழிலில் ஈடுபட தீர்மானம்

சர்வதேச ரீதியில் நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு மேலும் அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் கம்பஹா மாவட்ட ஒருநாள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் இன்ற முதல் (26 ) கடற்றொழிலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கமும் , நீர்கொழும்பு ஆழ் கடல் மீன்பிடி படகு உரிமையார் சங்கமும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இரு சங்கங்களும் இணைந்து மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையாவன:

1. சர்வதேச ரீதியில் நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் தற்போது விடுக்கப்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு மேலும் அசௌகரியங்களை ஏற்படுத்தாமை.

2. தற்போது நீர்கொழும்பு களப்பு மற்றும் நீர்கொழும்பு துறைமுகத்தில் அதிக எண்ணிக்கையான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் தொடர்ந்தும் அவைகளை நிறுத்தி வைப்பதில் உள்ள அசௌகரியம் ஏற்பட்டுள்ளமை.

3. ஆழ்கடல் மீன்பிடி துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்; பகிஸ்கரிப்பு காரணமாக தொழிலில் ஈடுபடாமையினால் அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருத்தல்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மாதங்களில் மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் புத்தளம் மற்றம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கும் முடிவெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment