போர்க்குற்ற சிறப்புத்தூதர் பூசா சிறைச்சாலைக்கு விஜயம் செய்து முன்னாள் புலிகளுடனும் பேச்சு!
புலிகளுடன் இணைந்து மேற்கொண்ட மனித குலத்திற்கு எதிரான செயல்களுக்கான தண்டனையை பெறத்தயாராகவே இருக்கின்றேன்.
முன்னாள் புலி உறுப்பினர்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் அந்நாட்டின் சிறப்புத்தூதுவர் ஸ்டீபன் ராப் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதுடன் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, வெளிவிகார அமைச்சர் ஜிஎல் பீரீஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்துவிட்டு தரைமார்க்கமாக யாழ் சென்று யாழ் அரச அதிகாரிகள் மற்றும் இராணு உயரதிகாரிகளை சந்தித்ததுடன் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.
மேற்படி தரப்பினரை சந்தித்து பெற்ற தகவல்களுடன் நேற்று தென்னிலங்கையின் காலி துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள பூசா தடுப்பு முகாமுக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஸ்டீபன் ராப் அவர்களுடன் உரையாடிய முன்னாள் புலிகளில் ஒருவர், புலிகள்; மேற்கொண்ட மனிகுலத்திற்கு எதிரான செயற்பாடுகளை விரிவாக எடுத்துக்கூறியுள்ளதுடன், அவ்வியக்கத்துடன் இணைந்து விரும்பியோ விரும்பாமலோ தான் மேற்கொண்ட குற்றச்செயல்களை நீதிமன்றில் ஒத்துக்கொள்ளப்போவதாகவும், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கிலே ஸ்டீபன் ராப் அவர்களை சந்தித்த மக்கள் எவ்வாறான செய்திகளை கூறியிருந்தார்கள் என யாழிலிருந்து புரளியை கிளப்பிக்கொண்டிருக்கும் உதயன் பத்திரிகைகள் வெளியிட்டிருந்த செய்திகள் உண்மையாக இருந்திருந்தால், காலி பூஸா தடுப்பு முகாமில் அவர் புலிகளிடம் நேரடியாக கேட்டறிந்திருந்த விடயங்கள் நிச்சயம் அவரை சங்கடத்தில் தள்ளியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள் என இனம்காணப்பட்டுள்ளபோதும், அவர்கள் தற்போது முன்வைக்கின்றவாதம் புலிகளின் கோர முகத்தை ஸ்டீபன் ராப் உணர்வதற்கு போதுமானதாக அமைந்திருக்கும். புலிகளியக்கத்திலிருந்தபோது, தமக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை நிறைவேற்றியே தீரவேண்டும் எனவும் அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் ஏன் மரண தண்டை நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டெனவும் தெரிவித்துள்ள முன்னாள் புலிகள், புலிகளியக்கத்திலிருந்தபோது மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாகவும் அது நிர்ப்ந்தத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டவை எனவும் ஸ்டீபன் ராப் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வடபகுதி சென்ற ஸ்டீபன் ராப் அவர்களை மக்கள் சந்தித்துள்ளபோதும், சந்தித்த மக்கள் தொடர்பான பூரணமான உண்மையை ராப் அறிந்திருந்தாரா என்பது தான் இங்கு எழுகின்றகேள்வி. ராப் அவர்களுடனான இச்சந்திப்பின் முகவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் செயற்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் செல்லும் இராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்கென தம்முடன் ஒரு கூட்டத்தையே வைத்துள்ளனர் என்ற உண்மை இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்புக்கிடையாது. இவ்வாறான மக்களின் ஒருதொகுதியினரே சிறிதரனால் ராப் முன் ஆஜர்படுத்தப்பட்டவர்களாக இருக்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதயசுத்தியுடன் செயற்படுகின்றவர்களாயின், இராஜதந்திரிகள் மக்களை சந்திக்க விரும்புகின்றோம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் எனக் கோருகின்றபோது அதற்கான பகிரங்க அழைப்பை விடுத்து அதன் வெளிப்படைத் தன்மையை பேண மறுப்பதிலிருந்து இவர்களின் நேர்மைற்ற தன்மையை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கையிலே இடம்பெற்றபோரில் அப்பாவிகளான மூவினத்தையும் சேர்ந்த மக்களும் இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இறுதிக்கட்ட போரிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளது என்பதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குற்றாவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அதற்கான நடைமுறைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவர் குற்றவாளி என சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி. இந்நிலையில் எவ்வாறு குற்றவாளிகளை இனம்கண்டு தண்டனை வழங்கப்போகின்றார் என்பதும், இதனால் அவர் எதிர்கொள்ளப்போகும் அரசியல் அழுத்தங்களை எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பதும் சாதாரண விடயங்கள் அல்ல. எதுஎவ்வாறாயினும் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியே மக்களும் சர்வதேசமும் எதிர்பார்த்து நிற்பதாகும். அது அரசதரப்பிலிருந்து கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
ஆனால் புலிகள் தரப்பில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பொறுப்புக்கூறுவது யார்?
புலிகள் 30 காலம் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் மேற்கொண்ட மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள், உலகின் எந்த மூலையிலும் இடம்பெற்றிராதவை. எந்தமக்களின் விடுதலைக்காக போராடுகின்றோம் எனக்கூறினார்களோ அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அடிமைகளாகவும், மனித கேடயங்களாகவும் பயன் படித்தினர்.
சிறார்களை தமது விருப்பிற்கு மாறாக பலாத்காரமாக படையில் இணைத்து அவர்களை யுத்தத்தில் ஈடுபடச் செய்தனர், அவ்வாறு புலிகளியக்கத்தில் இணைய மறுத்த சிறுவர்களை அவர்களது பெற்றோர் உறவினர்களை துன்புறுத்தினர் , அவயங்களை கண்டதுண்டமாக வெட்டினர், ஏன் சுட்டும் கொன்றனர்.
அதற்கான ஒர் ஆதாரப் பதிவை இங்கே கிளிக்செய்து பார்வையிடலாம்.
அங்கவீனர்களின் சிறப்புரிமைகளுக்கென ஐ.நா ஒரு சிறப்புச்சட்டமே வைத்திருக்கின்றது. ஆனால் புலிகள் தமது இயக்கத்திலிருந்து அங்கவீனமானவர்களை, நிரந்தர அங்கவீனர்களான பின்னர் கூட இயல்பு வாழ்வுக்கு திரும்ப அனுமதிக்கவில்லை. அவர்களை நவம் அறிவுக்கூடம் எனும் பெயரில் தடுத்து வைத்திருந்து அவர்களிடம் பல்வேறு வேலைகளை பெற்றனர். வெடிகுண்டு தாயரித்தல், ஆயுதங்களை துப்பரவு செய்தல், பிரச்சார வேலைகளை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தினர்.
புலிகளின் தளபதிகள் தனித்தனி சொகுசு மாளிகைள் அமைத்து உல்லாச வாழ்வு வாழ்ந்தனர். ஆனால் ஆங்கவீனர்களான பின்னர் கூட இவர்களை இயல்பு வாழ்விற்கு அனுமதியாது பெரும் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த அவல வாழ்வு வெறுத்த பல அங்கவீனர்கள் புலிகளின் கடற்புலிகளின் தற்கொலைப்பிரிவில் இணைந்து தமது வாழ்வினை அழித்துக்கொண்டனர். அங்கவீனர்களான இவர்கள் இயல்பு வாழ்விற்கு அனுமதி மறுக்கப்பட்டமையாலேயே இவ்வாறு தற்கொலைசெய்து கொள்ளும் முடிவுக்குச் சென்றதாக அவர்களின் உறவுகளிடம் தெரிவித்தும் உள்ளனர்.
இறுதியில் எஞ்சியிருந்த அங்கவீனர்களை பஸ் ஒன்றில் ஏற்றி ஒரு கோப்பை தேநீரை வழங்கிவிட்டு பஸ்ஸிற்கு குண்டுவைத்து தகர்த்தனர். இவ்வாறு இறந்தவர்களின் பெற்றோர் , சகோதரர்கள், உறவினர்கள் வடகிழக்கை சேர்ந்தவர்களே. அவர்களிடம் ராப் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் புலிகளின் கொடுமைகள் மேலும் தெளிவாகியிருக்கும்.
புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பினை மேற்கொண்ட தருணத்தில் தமது பெண்பிள்ளைகளை புலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக பெற்றோர் சிறுவயதினிலேயே திருமணம் செய்து கொடுத்தனர். கர்ப்பிணி என்ற காரணத்தைகாட்டி அல்லது குழந்தையின் தாய் என்ற காரணத்தைகாட்ட தப்பதித்துக்கொள்ளலாம் எனக் கருதிய இளம் பெண்கள் கர்பிணியானார்கள்.
ஆனாலும் அவர்களால் புலிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவர்களுக்கு நேர்ந்த கொடும்கதி உலகில் எந்ந மூலையிலும் இடம்பெற்றிருக்கவில்லை. பிடித்துசெல்லப்பட்ட இளம்பெண்கள் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கர்ப்பிணகள் என்பதை உணர்ந்த பயிற்சியாளர்கள் கர்ப்பிணிகளை உயர்ந்த மரங்களில் ஏறவைத்து குதிக்க வைத்தனர். கரு சிதைந்து நாசமாகியது, சிலர் பெரும் இரத்தப்பெருக்கினால் நிரந்தர நோயாளிகள் ஆயினர், சிலர் மரணத்தை தழுவினர்.
இவ்வாறு புலிகள் மனித குலத்திற்கு எதிராக மேற்கொண்ட அநியாயங்களை அடுக்கிக்கொண்டே செல்லமுடியும். அத்துடன் இவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வடகிழக்கிலேயே வாழ்கின்றனர். ஆனால் இப்பாதகச் செயல்களுக்கு பொறுப்பான புலிகளின் தளபதிகள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தொடர்ந்தும் இலங்கையில் அமைதியின்மையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முனைப்புடன் செயற்படும் சர்வதேச சமூகம் முதலில் புலம்பெயர் நாடுகளில் உள்ள போர்குற்றம் புரிந்த புலிகளை கைது செய்யுமா?
...............................
0 comments :
Post a Comment