அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!
"ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடருவோம் என இந்தியா அறிவித்துள்ளது அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல்" என அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பகிரங்கமாக பகைமை நிலவி வருகிறது. ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தன் நட்பு நாடுகளிடம் ஈரான் உறவை முறித்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடரப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல் எனவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் கூறினார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணகர்த்தாக்களில் இவர் ஒருவராவர். அவர் மேலும் கூறும்போது, "ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடரும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை" என்றுள்ளார்.
சமீபத்தில் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன் நிறுத்தியிருந்த காரில் வைக்கப்பட்ட குண்டுக்கு ஈரானே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு பகிரங்கமாக குற்றம் சுமத்தியபோது, அக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்த ஒரு நாடும் செயல்பட்டதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என இந்தியா பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
...............................
0 comments :
Post a Comment