இலங்கைக்கு எதிராக பல்வேறு பொய்களைச் சொல்லி சர்வதேசம் எங்கும் பரந்துள்ள பயங்கரவாத சக்திகள் சதிவலைகளைப் பின்னுகின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 64 வது சுதந்திரதினத்தை ஒட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு சொன்ன அவர் இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் எனவும் சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை இலங்கைக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளளார்.
'ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இன்று அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் புராதன வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின பிரதான வைபவத்தின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2700 பேர் பங்கு கொண்டனர்.
1500 இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள்- இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 320 வீரர்களும்- இலங்கை கடற்படையைச் சேர்ந்த 350 வீரர்களும்- பொலிஸ்- விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 250 வீரர்களும்- சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 வீரங்களும் தேசிய இளைஞர் படையணியைச் சேர்ந்த 200 பேரும் இதில் அடங்குவர்.
இதேவேளை- அநுராதபுரம்- பொலன்னறுவ- வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் 45 கலாசார குழுக்களைச் சேர்ந்த 2552 நடன மற்றும் நாட்டியக் கலைஞர்களும் பாடசாலை மாணவ- மாணவிகளும் இன்றைய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம் நகரில் நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உயிரிழந்த படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இவ்விடத்தில் நின்று என் கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன்.
சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது. இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடுமளவுக்கு நாம் வந்துள்ளோம். கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி- சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர்.
நாம் இன்று நீண்டதூரம் பயணிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். எமது பாரிய அபிவிருத்திகளில் 80 சதவீதமானவை கிராமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. கிராமங்களிலிருந்து தேசிய அபிவிருத்திக்கு இவற்றை இட்டுச் செல்ல வேண்டுமாயின் கல்வி- தொழில்நுட்பம்- விஞ்ஞானம் என சகல துறைகளிலும் எமக்கு தோள் கொடுக்க வேண்டும். உலக பொருளாதார நெருக்கடி இலங்கைகையும் பாதிக்கும். இருப்பினும் எமது எழுச்சி அவற்றைச் சமாளித்துள்ளன. பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக நாடுகளுக்கு உதவி செய்யும் சக்தியும் எமக்கும் எமது நாட்டு மக்களுக்கும் உண்டு. எமது சக்தியை தொடர்ந்து நாம் காட்ட வேண்டும். பொருளாதார சுதந்திரம் மூலம் அதனை எம்மால் செய்ய முடியும்.
இலவச கல்வி- சுகாதாரம் முறைமையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர இலவச கல்வித்திட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியபோது- எஸ்.ஏ. விக்கிரமசிங்க- என்.எம். பெரேரா- ஜே.ஆர்.ஜெயவர்தன- டி.ஏ. ராஜபக்ஷ உட்பட பலர் அதனை ஆதரித்தனர். எமது மக்களுக்கான இலவச கல்வியைiயும் இலவச சுகாதார திட்டங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எமக்கு எதிராக வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத சக்திகள் பல்வேறு பொய் பிரசாரங்களையும் சதி வலைகளையும் பின்னி வருகின்றன. இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை இலங்கைக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தனியொருவரினால் செய்யக்கூடியது அல்ல. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உண்மையை புரிந்துகொள்ளவும் வேண்டும். வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான நிரந்தரமான சமாதானக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழுநாடுமே அனைத்து எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையில் கடந்தகால பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது. எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதன் பரிந்துரைகளை ஏற்று குறுகிய காலத்திற்குள். அதாவது கடந்த 6 வார காலங்களாக நாம் அவற்றை நிறைவேற்றியே வருகின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது சர்வஜன வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை ஒதுக்கி வைத்துவிட்ட எம்மால் முடியாது. நாட்டின் நீதி- சட்டம் அனைத்துக்கும் நாம் அடிபணிவதுபோன்றே ஜனநாயக சக்தியான நாடாளுமன்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.
சர்வஜன வாக்குகளினால் மாத்திரமே ஓர் அரசாங்கத்தினை கவிழ்க்கும் கட்டுப்பாட்டுக்குள் நாம் உள்ளோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். அந்தவகையில் ஜனநாயக நீரோட்டத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே உண்டு. இதில் கலந்துகொண்டு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் செவிமடுத்துஇ மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. எனவே அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
கௌதம புத்தரின் போதனைப்படி குரோதம் காட்டுபவர்களுக்கு அன்பை செலுத்தி-துரோகம் செய்பவர்களுக்கு நல்வழி காட்டி - நற்பிரஜைகளாக நாட்டில் வாழ நாம் வழி சமைப்போம்.
அனைவருக்கும் சுபீட்சம் உண்டாவதாக
மேலும் அவர் விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்துச்செய்தியில்..
சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும்.
இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது. சுதந்திரப் பொருளாதாரத்திற் கான வழிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு சுபீட்சமான எதிர்காலத்திற்கான தேசத்தின் அபிலாஷைகளுக்கு அது தினம்தோறும் வலிமையூட்டிக் கொண்டிருக்கின்றது.
வெளிச் சக்திகளுக்கு அடி பணியாது நாட்டினதும் தேசத்தினதும் கரிசனைக்குரிய பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக முடிவெடுக்கின்ற சுதந்திரத்தை எமக்கு வழங்கியுள்ளது. எமது தேசம் எம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கும் மிக முக்கியமான பொறுப்பு இதுவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன். உன்னதமான சுதந்திரத்தின் உறுதியான ஒன்றிணைவைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
சமாதானம்- நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்படுகின்ற போதே நாட்டின் அடைவுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நோக்கங்கள் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சுதேச செயற் திட்டத்தின் ஊடாக தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் இனியும் தயங்கப் போவதில்லை. அதீத பொறுமையுடன் நாடு எதிர்நோக்கிய பல்வேறு சவால்களை நாம் வெற்றிக் கொண்டுள்ளோம்.
நட்பு ரீதியான தொடர்புகளின் ஊடாக சர்வதேச சமூகத்துடன் பயனுறுதிமிக்க வகையில் பொருளாதார- அரசியல்- பாதுகாப்பு- வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளை கட்டியெழுப்பியுள்ளோம். முன்னெப்போதைப் பார்க்கிலும் நாம் மிகவும் அறிவுபூர்வமாகவும் நாட்டுப் பற்றுடனும் செயற்பட்டு இவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டும்.
அதே போன்று நாட்டை அதன் பெறுமான முறைமைகளை விருத்தி செய்து முன்னேற்ற பாதைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒரு அமைதியான சூழலில் ஒரு சுபீட்சமான வாழ்க்கைக்கான வழியேற்படும்.
உயர் சுதந்திரத்திற்கான தேசத்தின் சவால்களை வெற்றிக் கொள்வதற்கு தமது உயிர்களைக் கொடுத்து உன்னத தியாகம் செய்த எல்லா நாட்டுப் பற்றுடையவர்களுக்கும் தேசத்தின் மதிப்பும் கெளரவமும் என்றும் உரித்தாகும்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.(எம்.ரி.977)
...............................
No comments:
Post a Comment