நில ஆக்கிரமிப்பு மற்றும் மிரட்டல் புகாரைத் தொடர்ந்து, சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரது உறவினர் சுவாமிநாதனை, சென்னை பெசன்ட் நகர் வீட்டில், தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ராவணன், திவாகரனைத் தொடர்ந்து நடராஜனும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் மீது, தஞ்சாவூர், அன்பு நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
தஞ்சாவூரில் எனக்குச் சொந்தமாக 15 ஆயிரம் சதுரடி தோப்பு உள்ளது. அந்த நிலத்தை, நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர், தங்களுக்கு விற்பனை செய்ய வற்புறுத்தினர். அவர்களுக்கு விற்க நான் சம்மதிக்காததால், தோப்பிற்குள் குடிசை போட்டு ஆக்கிரமித்துக் கொண்டனர். இதுகுறித்து கேட்டபோது, கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், நேற்று முன்தினம், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் நடராஜன் உள்ளிட்டோர் மீது, தஞ்சை குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு, சென்னை, பெசன்ட்நகர், பாரி தெருவில் உள்ள நடராஜன் வீட்டிற்கு, தஞ்சை டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மாணிக்கவாசகம், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வந்தனர்.
அப்போது அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக, வீட்டில் இருந்தவர்கள் கூறியதால், மீண்டும் 6.30 மணிக்கு வந்தனர். அப்போது, வழக்கு விவரங்களை நடராஜனிடம் எடுத்துக் கூறி, முதலில் விசாரணை நடத்திய போலீசார், பின்பு அவரை கைது செய்வதாகக் கூறி, தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். நடராஜனுடன் அவரது உறவினரான சுவாமிநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் உடனடியாக தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜரான சசிகலா, "சொத்து வாங்கியது, பணப்பரிவர்த்தனை பற்றி முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒன்றும் தெரியாது; நான் தான் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டேன்' என்று சாட்சியம் அளித்த நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக வலம் வந்தவர் சசிகலா. தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இவர், கணவர் நடராஜன் மற்றும் உறவினர்கள் என பலர், அ.தி.மு.க., வில் அதிகார மையங்களாகச் செயல்பட்டு வந்தனர். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில் இருந்து, வெற்றி பெற்ற பின்பு, அமைச்சர்கள் நியமனம் வரை, நடராஜன், சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், ராவணன் உள்ளிட்டவர்களின் பரிந்துரைக்கே முதலிடம் கிடைத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிகார மையங்களில் உள்ளவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் கூறி, பல முறைகேடுகளில் ஈடுபட்டது, கோடிக்கணக்கில் பல்வேறு வகைகளில் வருமானம் பார்த்தது உள்ளிட்ட புகார்கள் கிளம்பின. முதல்வருக்கே எதிரான வேலைகளில் இவர்கள் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் சசிகலா, நடராஜன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கட்சியில் இருந்தும், போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்த நடவடிக்கையாக, சசிகலா குடும்பத்தில், அவரது சகோதரரான திவாகரன், உறவினர் ராவணன் உள்ளிட்டோர் மீது, நில மோசடி, குவாரி உரிமம் மோசடி உள்ளிட்ட புகார்கள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment