சிலாபத்தில் இம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான மீனவரின் படுகொலைக்கும் எரிபொருள் விலையேற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
நீர்கொழும்பு - தளுபத்தை தேவாலயத்திற்கு முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக நீர்கொழும்பு– சிலாபம் பிரதான வீதியூடாக நீர்கொழும்பு பிரதான வீதிக்கு வந்தடைந்தது . பின்னர் நகரின் மத்தியில் மணிக்கூட்டு கோபுரம் அருகில் கூட்டம் இடம்பெற்று ,மீண்டும் கடற்கரை தெரு வழியாக வந்த பேரணியில் ஈடுபட்டோர்களில் முக்கியஸ்தர்கள் பலர் நண்பகல் 12 மணியளவில் ஹெமில்டன் வாவியினூடாக சிறிய படகுகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி பயணித்தனர்.
ஐக்கிய எதிர்கட்சியினர் அமைப்பும் சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கனேசன் ,ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன ,தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே, நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே .க உறுப்பினர்கள் , சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர் பிரிட்டோ பெர்னாந்து,மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
மணிக்கூட்டு கோபுரம் அருகில் இடம்பெற்ற கூட்டத்தி;ல் மனோ கணேசன் உரையாற்றுகையில் இந்த அரசாங்கத்தின் மோசமான ,கேவலமான அறிவீனமான செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம் ,தற்போது எமது போராட்டம் ஆரம்பமாகியுள்ளது .இனிமேல் இந்த போராட்டம் தொடரும் .எரிபொருள் விலை அதிகரிப்பானது நடுத்தர மக்களையும், குறைந்த வருமானமுடையவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது . அடக்கு முறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் உள்ளது என்றார் .
இதேவேளை நீர்கொழும்பு மீனவர் கடலுக்கு தொழிலுக்கு செல்லாமையால் நீர்கொழும்பில் உள்ள திறந்த மீன் விற்பனை சந்தைகள் மற்றும் மீன்விற்பனை சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அத்துடன் நீர்கொழும்பு களப்பில் மீன்பிடி படகுகள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டபடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment