சர்வதேச சக்திகளை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவீர். விமல் வீரவன்ச
சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கும் முயற்சிகளை தோற்கடிப்பதற்காக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் மக்களை தூண்டி, அவர்களை வீதிகளில் இறக்கி, சூழ்ச்சிகளை புரிய முடியுமென்ற சிந்தனையில், ஒரு சிலர் பெரும் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள விமல் வீரவன்ச இவர்கள் ஒரு சில வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இயங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கேகாலை பெட்டிமுல்லவில் நிர்மாணிக்கப்பட்ட கோல்டன் கிரேட் ஜனசெவன வீடமைப்பு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது மேற்கண்ட அழைப்பை விடுத்த அவர் மேலும் கூறுகையில் யுத்தத்தின் மூலம் வெற்றிபெறுவதற்கு, மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. இவர்களுக்கு எமது நாட்டை கூறுகளாக பிளவுபடுத்த வேண்டிய தேவையே இருந்தது. அவர்களது தேவையை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி அவர்களது திட்டங்களை முறியடித்து உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார். இதற்கு பழிவாங்கும் வகையிலேயே இன்று சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறான தலைவர்களின் முன்மாதிரிகள் உலக நாடுகள் பின்பற்றக்கூடாது என்ற யோசனையிலேயே மேற்குலக சக்திகள் எமது நாட்டுக்கு எதிராக தடைகளையும் சூழ்ச்சிகளையும் மேற்கொள்ள முனைகின்றன.
எமது சமிக்ஞையை மீறி சென்றால் காலங்கடந்தேனும் நாம் தண்டனை வழங்குவோம் என்பதை ஏனைய நாடுகளுக்கு எச்சரிப்பதே மேற்குலக நாடுகளின் நோக்கமாக உள்ளது.
தற்போது விழித்து எழ வேண்டிய நிலை எமக்கு உள்ளது. எம்மத்தியில் கருத்து முரண்பாடுகள் கொள்கை முரண்பாடுகள் இருந்த போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு எதிரான தீய சக்திகளை ஒழிக்க ஒரே அணியில் அனைவரும் அண்திரள வேண்டிய தேவை உள்ளது.
மக்களுக்கு உயரிய பயன்களை வழங்கி துரித அபிவிருத்திகளை நாட்டில் ஏற்படுத்துவதே ஜனாதிபதி உள்ளிட்ட அசராங்கத்தின் நோக்கமென தெரிவித்த அமைச்சர் இதனை தடுக்கும் வகையில் ஒரு சில சர்வதேச சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை தோல்வியடையச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment