Thursday, February 23, 2012

இலங்கை விகாரத்தில் தலையிட சர்வதேசத்திற்கு உரிமை கிடையாது. ரஷ்யா

இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை, எந்தவொரு தரப்பிற்கும் கிடையாதென்ற அடிப்படையில் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பில் எந்தவொரு வெளி தரப்பின் தலையீடுகளும் அவசியமில்லையென, ரஷ்யா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ரஷ்ய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளேடிமீர் பீ. மிஹைலோ மேற்கண்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் ஏற்பட்டு, 55 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர் இலங்கையை இந்தளவு நெருக்குதலுக்கு உட்படுத்த வேண்டிய எந்தவித தேவையும் எவருக்கும் கிடையாது எனவும் இவர்கள் சொல்வதை போன்று, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை எனவும் தற்போதும் இங்கு அவ்வாறு இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதனைவிட மனித உரிமைகள் மீறப்பட்ட பல நாடுகள் இருக்கலாம். சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை, இதுபோன்று இலங்கையின் மீது அழுத்தங்களை திணிப்பதற்கு. இலங்கையின் விடயங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு. அவ்வாறான ஒரு நாட்டின் அந்தரங்க விவகாரங்களில் தலையிடும் உரிமை, அவர்களுக்கு இல்லை. எந்தவொரு நாட்டிலும் ஆட்சி நடாத்துவது  யார் ? அதிகாரத்திற்கு வருவது யார்? என்பதை, கண்டறிவதற்கு, வல்லரசு நாடுகளுக்கு உரிமையில்லை. அதனை தீர்மானிப்பவர்கள், அந்நாட்டு மக்களாவர். அவர்களின் விருப்பத்திற்கேற்பவே, அது தீர்மானிக்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை, அந்நாட்டு அரசாங்கத்திற்கே உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com