Saturday, February 4, 2012

அமெரிக்க விமானிகளுக்கு விமானத்தில் ஏற்படும் மர்ம மயக்கம்!

அமெரிக்க விமானப்படையின் குறிப்பிட்ட ரக விமானங்களைச் செலுத்தும் விமானிகள் மயக்க நிலைக்கு செல்லும் மர்மம், தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானங்களில் மட்டும், இவர்கள் ஏன் மயக்க நிலைககு செல்கிறார்கள் என்பதை விமானப்படையால் இன்னமும் உறுதி செய்துகொள்ள முடியவில்லை என்றும் தெரியவருகிறது.

F-22 ரக போர் விமானங்களை செலுத்தும் அமெரிக்க விமானப்படை விமானிகளே, விமானம் பறக்கும்போது அதீத சோம்பல் நிலையையும், அதைத் தொடர்ந்து பாதி மயக்க நிலையையும் அடைகிறார்கள் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. சில சம்பவங்களில், விமானத்தில் இருந்து இறங்கியபின் விமானிகள் முழு மயக்க நிலைக்கும் சென்றுளளார்கள்.

விமானத்தில் உள்ள ஏர்-சப்ளையில் ஏதோ சிக்கல் இருப்பதாக விமானப்படை கருதியது. விமானிகள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜின், விமானத்துக்கு வரும் ஏர்-சப்ளை லைன் ஊடாகவே வருகிறது. ஆனால், பல சோதனைகள் செய்யப்பட்ட பின்னரும், அதில்தான் தவறு என்பதை இவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

கடந்த வருடத்தில் இரு தடவைகள் அமெரிக்க விமானப்படையின் அனைத்து F-22 போர் விமானங்களையும் தரையிறக்கி, சோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். முதலில் அனைத்து F-22 போர் விமானங்களையும் ஆபரேஷன்களில் இருந்து அகற்றி, 140 நாட்கள் பறக்க அனுமதிக்காமல் தரையில் நிறுத்தியிருந்தார்கள். கடந்த செம்டெம்பர் மாதத்தில் இது முடிவடைந்தது.

சுமார் 5 மாதங்கள் F-22 போர் விமானங்கள் எதுவும் விமானப்படையில் இயக்கப்படாத நிலையில், அவை அனைத்துக்கும் ஏர்-சப்ளை சிஸ்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான செலவு 7 மில்லியன் டாலர்.

அதன் பின்னரும் விமானிகள் சோம்பல் நிலைக்கு செல்வதும், மயக்கமடைவதும் நிற்கவில்லை. இதையடுத்து மீண்டும் அனைத்து விமானங்களையும் தரையிறக்கினார்கள். இம்முறை விமானங்கள் 7 நாட்களுக்கு இயக்கப்படவில்லை. வர்த்தக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜின் ஸ்டாட்டர் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டது. இது கடந்த மாதம் நடைபெற்றது.

இன்னமும் சிக்கல் முடிந்தபாடாக இல்லை! F-22 விமானிகளின் ரத்த சாம்பிள்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட ரிப்போர்ட், இவர்கள் சுவாசிக்கும் காற்றில் வழமையைவிட அதிகளவு நைட்ரஜின் இருப்பதாக வந்துள்ளது. இது விமானத்தில் உள்ள OBOG (OnBoard Oxygen Generating) சிஸ்டத்தில் உள்ள கோளாறாக இருக்கலாம் என்பதே தற்போதைய ஊகம்.

சமீபத்தில் விமானிகள் அதீத சோம்பல் அல்லது பகுதி மயக்க நிலைக்கு சென்ற 14 இன்ஸிடென்ட்டுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப்படையில் F-22 ரக விமானங்களைத் தவிர, F-16, F-15E, A-10, F-35, B-1, B-2, CV-22, மற்றும் T-6 ஆகிய ரக விமானங்களும் பாவனையில் உள்ளன. இந்த விமானங்கள் எதிலும், விமானிகள் மயக்கமடையும் சிக்கல் ஏதும் ரிப்போர்ட் செய்யப்படவில்லை.

அமெரிக்க விமானப் படையில் F-22 ரக போர் விமானங்கள் மொத்தம் 170 உள்ளன. விமானப் படையின் வான் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை இந்த ரக விமானங்கள்தான்.

No comments:

Post a Comment