வானொலி பிரதான ஊடகம் மக்களுடன் மிக நெருக்கமான ஊடகம். இலஙகையில் தமிழ் வானொலியின் வரலாறு 50 வருடங்களுக்கு மேல் பழைமையாதாயினும் பல மாற்றங்கள் அதில் நிகழ்ந்துள்ள போதிலும் இந்த துறை பற்றி நாம் செய்த ஆய்வுகளும் விவாதங்களும் அறிவுபூர்வமான விமர்சனங்களும் மிகக் குறைவானதாகும். ஊடகம் என்பது அது என்ன வடிவில் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம்தான் அதன் அடிப்படை.
எமது வானொலிகள் இந்தக் கொள்கைக்கு எவ்வளவு தூரம் தம்மை அர்ப்பணித்துள்ளன? பண்பாட்டு வளாச்சிக்கும், மனித வலுவூட்டலுக்கும், மொழிவளாச்சிக்கும் இவை சாதித்தவை என்ன? என்ற கேள்விகள் முக்கியமானவை சமூக மட்டத்திலிருந்து எழும் இக் கேள்விகளுக்கு பதில் தேவை என்று பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவர் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் தெரிவித்தார்
எம். சி. றஸ்மின் எழுதிய சமூக வானொலி நூல் வெளியீட்டு விழா வெள்ளவத்தை தமிழ் சங்க கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சபா. ஜெயராஜா தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கலாநிதி எம். எஸ். எம். அனஸ் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், எம். சி. றஸ்மின் எழுதியுள்ள சமூக வானொலி என்ற நூல் இவ்வகை எண்ணங்கள் பலவற்றைச் சிந்திப்பதற்கான சிறந்த களத்தை உருவாக்கித் தந்துள்ளது. ஒலிபரப்புத் துறை பற்றி கல்வி நோக்கு, ஆய்வு என்ற பின்னணியில் ஆழமாக இவ்விடயங்களை அணுகும் நூல்கள் இல்லை என்ற குறையையும் றஸ்மின் எழுதியுள்ள நூல் நிறைவு செய்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் சிவபாத சுந்திரம் எழுதிய ஒலிபரப்புக் கலை என்ற நூலுக்குப் பின்னர் எனது கவனத்திற்கு வந்த ஒலிபரப்புத்துறையை ஒரு கல்வி நிலையில் ஆராய்கின்ற நூல் என்று இதைக் கூறத் தோன்றுகிறது.
பீ. எச். அப்துல் ஹமீத் குறிப்பிட்ட விமல் சொக்கநாதனின் நூல் இந்தப் பின்னணியில் எழுதப்பட்ட மற்றுமொரு நூலாகக் கருதலாம்..
ஒலிபரப்புத்துறை தனித்துவமானது அறிவிற்கும் பண்பாட்டிற்கும், மொழிவளாச்சிக்கும். மனித வலுவூட்டலுக்கும் வளம் சேர்க்கக் கூடிய ஒரு வெகுசன அறிவூட்டல் கருவி. சமூக வானொலி நூல் பொதுவான ஒலிபரப்புத்துறையைப் பற்றிப் பேசவில்லை. அதனுடைய பிரதான உள்ளடக்கம் சமூக வானொலி என்ற மக்களுக்காகச் செய்யக் கூடிய பிரத்தியேகமான வானொலி பற்றியது.
இது இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு துறை. பெரிய விளம்பரங்களின்றி, பிரதேச வானொலியாகவும், அபிவிருத்தி நடைபெறும் பிராந்தியங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் செயலூக்கத்தை வழர்ப்பதற்காகவும் சுகாதார மற்றும் வாழ்க்கை சார்ந்த விடயங்ளைப் பகிர்ந்ர்து கொள்ளும் வானொலிகளைப் பற்றி இலங்கையிலும் ஓரளவு உலக அளவிலும் இயங்கும் இவற்றின் செயற்பாடுகள் பற்றி சமூக வானொலி நூல் விரிவாகப் பேசுகிறது.
ஆனால், இலங்கையின் இன்றைய ஒலிபரப்புத் துறையின் நிலை பற்றிய பரவலான மதிப்பீடுகளையும் கருத்துக் குறிப்புக்ககளையும் இந்நூல் முன் வைக்கிறது. விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயங்கள் சிலவற்றை இந்நூல் குறிப்பிட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லாத சூழலில், அரசாங்கத்தின் அதன் கட்சிக் கொள்கைக்கும் ஊதுகுழலாகச் செயற்படும் ஒலிபரப்புக்களின் பரிதாபமான நிலையை சமூகம் நன்றாகவே அறிந்திருக்கிறது.
பொறுப்பற்ற முறையில் சினிமாக் கலாசாரத்திற்குப் பலியாகியுள்ள சில ஒலிபரப்புக்கள். தமிழ் மொழியைச் சரியாகப் பேசுவதில், பிரயோகிப்பதில் அக்கறையில்லாத, திறன் இல்லாத செய்தி வாசிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் என்ற பிரச்சினை இன்னொரு புறம் படிப்படியாகத் தரமிழந்து செல்லும் நிகழ்வுகள் என்பனபற்றி விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் சிலவற்றை இந்நூல் பேசுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒரு காலத்தில் மிகத்தரமான நிகழ்ச்சிகளையும். மிகச் சிறந்த கலைஞர்களையும் உருவாக்கியதிலும் பண்பாட்டு விடயங்களையும் போதிய அளவில் முன்வைப்பதிலும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. தமிழ் பேசும் எல்லா இனத்தவர்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சித் தரம் இருந்தது. முஸ்லிம் நாடகம் முஸ்லிம் சேவை நாடக நடிகர்கள், அவர்களின் குரல் வளம் தமிழ் சேவையையும் திரும்பி பார்க்க வைத்தது. இன்று நாடகத்திற்கு என்ன நடந்தது. இஸ்லாமிய கீததிற்கு பெரும் களம் அமைத்துத்தந்த முஸ்லிம் அல்லாதவர்களின் கவனத்தையும் ஈர்த்த இசை நிகழ்ச்சிகள் ஏன் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ் சேவையாக இருந்தாலும் முஸ்லிம் சேவையாக இருந்தாலும் இவை பெரிய பலவீனங்களையும் சந்தித்து வரும் இந்த நிலைக்குக் காரணம் என்ன?
வானொலி பொது மக்கள் சாதானம், அறிவிற்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும், கலைகள் பற்றிய விபரிப்புக்களுக்கும், அறிமுகத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய ஊடகம். இந்த இலசட்சியங்களை அரச வானொலிகளும் தனியார் வானொலிகளும் செயல்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனவா? உண்மையில் காலத்தின் தேவை போன்ற இந்தக் கருத்துக்களை சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்கும் இந்த நூலும், இந்நூல் திறனாய்வு விழாவாக நல்ல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
உரையாடல்கள் தமிழ் ஒலிபரப்புத் துறையின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஒரு படிக்கல்லாகவும் நல்ல ஆரம்பமாகவும் அமைய வேண்டும். என்று அவர் மேலம் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரபல அறிவிப்பாளர்களான பீ. எச். அப்துல் ஹமீத், எழில் வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment