பிரபாகரனின் அரசியல் அறிவின்மையால் தமிழீழம் கைநழுவி போனதாம் என்கிறார் பிள்ளையான்.
தமிழர்கள் விட்ட தவறுகளைப் பற்றிச் சிந்திக்காது நாம் அரசியல் செய்ய முடியாது எனவும் இத்தவறினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செய்துவருவதாகவும் தெரிவித்துள்ள பிள்ளையான் பிரபாகரன் ஒருகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்திருந்தாலும் அவர் அரசியல் அறிவில்லாதவர் எனவும் அவ்வாறு அரசியல் அறிவுடையவராக இருந்திருந்தால் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பார் எனவும் அவ்வாறு அதை ஏற்றுக்கொண்டிருந்தால் சமஷ்டியை விடவும் அதிகமான எல்லோரும் கேட்கின்ற தமிழீழம் அளவிலான அரசாங்கமே கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது எனவும் அதனைப் பிரபாகரன் செய்யத் தவறிவிட்டார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயம் என பிள்ளiயான் தெரிவித்துள்ளார்.
'பொறுப்புள்ள அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஒரு கடிதம் எழுதினால் அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருக்கும். நான் சம்பந்தன் ஐயாவுக்கு எழுதிய கடிதத்துக்கு தம்பி பிள்ளையான் கடிதம் கிடைத்தது. எதிர்காலத்தில் இது குறித்து யோசிப்போம் என்றாவது ஒரு பதில் கடிதத்தினை எழுதியிருக்கலாம். அதனைக் கூட அவர்கள் செய்யவில்லை. இதிலிருந்து தமிழரசுக் கட்சி ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி அல்ல என்பது தெரிகிறது.
இந்தியாவில் பிரதமருக்கு தாக்குதல் நடத்தியதும் (இந்தியாவுக்கு அடித்ததும்) புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்ததும் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குக் காரணம்.
வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்று சொல்வதில் நலன் சார்ந்த விடயங்களைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்காது விட்டமை ஒரு சமூகத்தின் நலன் சார்ந்த விடயமாகவே இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - தமிழரசுக் கட்சி செய்வது வெறும் கட்சி அரசியல்தான். அதில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து ஒன்றுமில்லை.
தமிழரசுக் கட்சி இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தினை காட்டுகிறார்கள். அதற்கு அவர்கள் தேர்தலில் குதித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் தான் நிதி கொடுக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஒரு முகம். அரசாங்கத்திற்கு ஒரு முகம் எனப் பல முகங்களை அவர்கள் காட்டுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழரசுக் கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை இல்லை.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது நடைபெற்றால் முஸ்லிம்களின் தனி அலகை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள். அந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பார்கள். அதனை விடவும் கிழக்கிலுளள் சிங்களவர்களுக்கு உரிய இருப்பு எப்படி இருக்கும்' என்றார்.
துறைநீலாவணை கிராம அபிவிரத்திச் சங்கத் தலைவர் ரி.ரசிதரன் தலைமையில் நடைபெற்ற புதிய பாடசாலைத்திறப்பு விழா நிகழ்வில், துறைநீலாவணை மத்திய கல்லூரி அதிபர் சி.விநாயகமூர்த்தி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.பேரின்பராசா, பட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர் ஆகியோர் உரையாற்றினர்.
0 comments :
Post a Comment