Thursday, February 9, 2012

புலிகளுக்கு உதவி செய்ததை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்ட இலங்கை தமிழர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவி செய்ததாக தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை கனடாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். நீர்மூழ்கி படகு அமைப்பதற்குரிய மென்பொருளை கொள்வனவு செய்ய விடுதலை புலிகளுக்கு உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (08) ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை தமிழர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

கனடாவில் ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டுள்ளதால் குறைந்தது 15 வருடகால சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2009ம் ஆண்டில் கனேடிய அதிகாரிகளால் ரொரன்ரோவில் கைது செய்யப்பட்ட இவர், அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கணினி கருவிகள், இலத்திரனியல் பொருட்கள், தொடர்பாடல் கருவிகள் போன்றவற்றை கொள்வனவு செய்யவும் இவர் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment