Thursday, February 16, 2012

சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்பட்டால் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என்கிறார் கெமுனு

தமக்கு சலுகை விலையில் 76 ரூபாவுக்கு டீசல் வழங்கப்பட்டால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 20 சதவீத கட்டண அதிகரிப்பை கைவிடத் தயார் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமம் தமக்குத் தெரியும் எனவும் இதனால் தமக்கு மானியம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

நியாயமான அளவு மானியம் வழங்கினால் எந்த நேரத்திலும் பஸ் கட்டணத்தை குறைத்துக்கொள்ளத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

20 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பானது பஸ்கட்டண நிர்ணயிப்புக்கான சூத்திரத்தின்படி கணிக்கப்படவில்லை எனவும், பஸ் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குத்தகை வீதம், டீசல் விலை, நாளாந்த, மாதாந்த, வருடாந்த பராமரிப்புச் செலவுகள், வட்டிவீதம், பஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உட்பட 12 அம்சங்கள் கருத்திற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment