Friday, February 3, 2012

மாப்பிளைதேடுவது போல் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. பிரியதர்ஷன யாப்பா

இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாகவே தீர்வுகாணப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தீர்வு விடயத்தில் அரங்கத்தில் இருப்போரை ஒருமித்த கருத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் எனவும் 'மணமகனை' தேடுவது போல் தீர்வை தேட முடியாது எனவும் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர், அங்கு மேலும் குறியதாவது...

காணி, காவற்துறை அதிகாரங்கள் தொடர்பிலான நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி சிந்திக்கவேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 13 பிளஸ் குறித்து மட்டுமல்ல. பல்வேறு விடயங்களை எடுத்தியம்பி இருக்கின்றார்.

13 ஆவது திருத்தம் வடக்கில் மட்டுமே இதுவரையிலும் செயற்படுத் ப்படவில்லை. எதிர்காலத்தில் அங்கும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நடைமுறை சாத்தியங்களை பார்க்கவேண்டும். காணி அதிகாரங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கொன்றும் இருக்கின்றது. அதுதொடர்பில் மாகாண காணி ஆணையாளர் தீர்மானிக்கவேண்டும் என்பதுடன் இறுதி தீர்மானத்தை நாட்டின் தலைவரே எடுப்பார்.

காவற்துறை அதிகாரம் தொடர்பில் நடை முறை சாத்தியங்களை பார்க்கவேண்டும் என்பதுடன் இது சுயாதீன நாடாகும். கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கையின் பரிந்துரைகள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது பொது அறிக்கையாகும்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் உரிய பிரிவுகளுக்கு அனுப்பிவைக் கப்படுகின்றன. ஜெனிவாவில் நடை பெறவிருக்கின்ற மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அவ்வறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நியமிக் கப்பட்ட திஸ்ஸ விதாரண குழுவின் அறிக்கையின் யதார்த்தம் தொடர்பில் ஆராய வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வை மணமகனை தேடுவதை போல தேட முடியாது. அது இலகுவான விடயம் அல்ல.
தீர்வுகள் குறித்து கருத்து கூறுகின்ற உரிமை ஒவ்வொருக்கும் இருக்கின்றது. எனினும் தெரிவுக்குழுவில் முன் வைக்கப்படுகின்ற கருத்துக்களின் அடிப்ப டையில் அரசாங்கம் ஒருமித்த கருத்துக்கு முன்வரவேண்டும்.

அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அரசாங்கத்திற்கு பலவருட தொடர்புகள் இருக்கின்றன. மனித உரிமை பேரவை மாநாட்டில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

இந்தியாவுடனான எங்களது தொடர்பும் அவ்வாறே இருக்கின்றது. அமைசச்ர்கள், அதிகாரிகள் இந்தியாவிற்கு விஜயங்களை மேற்கொள்வர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவ்வாறே இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரது விஜயம் விசேடமானதொன்றல்ல.

பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்தும். தமிழ்நாட்டு பிரச்சினை இந்தியாவின் பிரச்சினையில்லை. பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com