1987 ஆண்டில் இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் நாற்பத்திரண்டாவது பிரிவின்படி எட்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு, 1988 ஆண்டில் முதல்முறையாக சகல எட்டு மாகாணங்களிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டு மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. 1988 ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபையானது மிகக்குறுகிய காலமே செயற்பட்டு, புலிகளின் வற்புறுத்தல்களுக்கிணங்க பிரேமதாசா அரசால் 1990 ஆண்டு, யூன் மாதம் கலைக்கப்பட்டது.
அதன்பின்னர் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கென தேர்தல் எதுவும் நடாத்தப்படவில்லை. வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகளின் பின்னர், 2006 ஆண்டில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீ ர்ப்பொன்றின்படி, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தனித்தனி மாகாணசபைகளாக பிரிக்கப்பட்டது.
தனியாக பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முதல்முறையாக 2008 ஆண்டு மே மாதம் நடாத்தப்பட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அமோக வெற்றியை ஈட்டியது. இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின்
வெற்றிலை சின்னத்தின்கீழ் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் இலங்கை முஸ்லீம்
காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில்
முதலமைச்சராக பதவியேற்ற சி.சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாணசபை நிர்வாகம், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதை போலவே, தனியாக பிரிக்கப்பட்ட வடக்கு மாகாணசபைக்கான தேர்தலும் விரைவில் நடாத்தப்படலாமென்ற ஊகங்கள், 2009 ஆண்டு மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பின்னரான காலப்பகுதியிலிருந்து நிலவி வருகின்றது. ஆனால் புலிகளை தோற்கடித்ததை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் 2009, 2010 ஆண்டில் நடாத்தி தனது அதிகாரத்தை தக் கவைத்துக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு தலைமையிலான அரசு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் இன்னமும் வெளியிடவில்லை.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (ஈபிடிபி) போன்ற
கட்சிகள் நீண்ட காலமாகவே வடக்கு மாகாணசபைக்கான நிர்வாகத்தை கைப்பற்றுவதறகான தயாரிப்பில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். 2010 ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் வடக்குக்கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருவெற்றியை ஈட்டியதால், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலிலும் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற அபிப்பிராயம் எல்லா தரப்பினரிடையேயும் நிலவுகின்றது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சோரம் போகும் மனப்பாங்கே ஈபிடிபி தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகளிடம் உருவாகியுள்ளது.
பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தினையாவது வடக்குக்கிழக்கில் அமுல்படுத்துமாறே
காலங்கடந்து இப்போது பல முனைகளிலிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. எனவே இந்த திருத்தச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை நிர்வாகத்திற்கான தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. காலங்காலமாக தமிழ் பிற்போக்கு சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தலைமைகளின் தற் போதைய அவதாரமான தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் ரீதியாக தோற்கடிக்க விரும்பும் ஏனைய தமிழ் கட்சிகள்,
இந்த தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தலில் கூட்டுச்சேர்வது பற்றி ஆலோசிக்காமல் இப்போதே தமது செயற்பாடுகளை ஒருமுனைப்படுத்துவது நல்லது. ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது என்று கருதப்பட்ட புலிகளும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை மனதிற்கொண்டு, தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஐக்கியப்படுங்கள். இல்லாவிடின் இந்த 'ஏனைய தமிழ் கட்சிகள்' தமிழ் பிற்போக்கு சக்திகளை தோற்கடித்து புதிய தலைமை
உருவாகுவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்றே கருத இடமுண்டு.
No comments:
Post a Comment