முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திர இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா மஹஜன கட்சியின் 28ஆவது வருடாந்த கூட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள் தமது அரசியல் வாழ்க்கையின் முக்கியமானதொரு தினமாகும் என ஹிருனிகா பிறேமசந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி எனும் ஒப்பற்ற பெரும் விருட்சத்தில் தாமும் இணைந்து கொள்ளவுள்ளமையே இதற்கு காரணம் என அவர் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாதர லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டார்.
பாரத லக்ஷ்மன் உயிரிழந்தபின் ஹிருனிகா பலராலும் அறியப்பட்டார். தந்தையின் மறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தனது தந்தையின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதனை தான் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
ஆயினும், தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதியான கருத்துக்களை வெளியாடிருந்த ஹிருனிகா இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை அறிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதியின் கணவரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான விஜய குமாரதுங்கவினால் இலங்கை மக்கள் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்கட்சியில் இணைந்தே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.
இன்று பாரத லக்ஷ்மனின் வழியில் அவரது மகள் ஹிருனிகா செல்ல முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment