Monday, February 6, 2012

தெரிவுக் குழுவுக்கு பெயர்களைத் தருவதில் TNA இழுத்தடிப்பைச் செய்து வருகிறது - சஜின் வாஸ்

பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்காகப் பெயர்களை வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். பொறுமைக்கும் எல்லையுண்டு. இந்த நிலைமை தொடருமானால், இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசு, சர்வ கட்சிக் குழுவைக் கூட்டும் என்று அரச தரப்புப் பேச்சுக் குழுவின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்ததன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பேச்சுகள் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவில் அரசு உறுதியாக உள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைத் தரும்வரை கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில்லை என்ற அமைச்சரவைத் தீர்மானத்தை எம்மால் மீற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்ததன ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயர்களைத் தருவதில் கூட்டமைப்பு தொடர்ந்து இழுத்தடிப்பைச் செய்து வருகிறது. பெயர்களைத் தருவதற்கான எந்த அக்கறையும் அவர்களிடத்தில் இல்லையென்றே எமக்குப்படுகிறது.

எனவே, தீர்வு முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி அறிவித்தபடி சர்வகட்சிகள் விரைவில் கூடும். அதற்கான திகதி அறிவிப்பும் வெளிவரும். கூட்டமைப்பு சாதகமான பதிலை வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பதால் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமில்லை என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , தங்களுடைய கோரிக்கைகளை புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழுப்பில் இருந்து வெளிவரும் The island நாளேட்டுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகளின் தமிழீழத்தின் இடைக்கால அரசின் பிரதமரான உருத்திரகுமாரனிடம், ஈழப் பிரச்சனையைப் பற்றித் தங்களுக்கு வேண்டிய வகையில், தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லைகளை மட்டுப்படுத்தாத புலிகளின் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் உருத்திரகுமாரன் ஈடுபட்டிருக்கிறார் என்றும் விமல் வீரனவன்ச தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com