எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து , எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவர்கள் இன்று வீதி மறியல் போராட்டத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு - குடாப்பாடு தேவாலயத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டமும் வீதி மறியல் போராட்டமும் தொடர்ந்தும் இடம் பெற்று கொண்டிருக்கிறது.
குடாப்பாடு பிரதேசத்திலும் , போருதொட்ட பிரதேசத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் , இந்த போராட்டம் எரிபொருள் விலைகளை குறைக்கும் வரை தொடர்ந்து இடம்பெறும் எனவும் , இன்றைய தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்வதிலிருந்து விலகி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர் .
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் எனவும், மண்ணெண்ணை மற்றும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குடாப்பாடு தேவாலயம் முன்பாக வீதியில் டயர்களை போட்டு எரித்ததுடன், வீதியை மறித்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு வீதிப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
பொலிசார் மீனவர்களிடம் வீதிப்போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதும், மீனவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இதேவேளை, நாளைய தினமும் வீதி மறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து இடம்பெறும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment