ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் எந்த நேரத்திலும் போர் தொடுக்கக் கூடிய நிலை இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலின் பிரதமரும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஈரான் மீது இஸ்ரேல் கை வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பது நிபுணர்களின் கணிப்பாகும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால் ஆயிரம் மைல்களைக் இஸ்ரேலின் போர் விமானங்கள் கடக்க வேண்டும். இத்தாக்குதலுக்கு 100க்கும் குறையாத போர் விமானங்களை பயன்படுத்த வேண்டும்
ஈரான் மீதான தாக்குதலானது மிகவும் சிக்கலானது. கடினமாக ஆபரேஷன் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
சிரியா மற்றும் ஈராக் மீதான முந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக ஈரான் மீதான தற்போதைய தாக்குதல் இருக்கக் கூடும்..
தொலைக்காட்சி ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பிரதிநிதிகளும் தற்போதைய நிலையில் ஈரான் மீது போர் தொடுப்பது என்பது அறிவுப்பூர்வமானது அல்ல என்றே கூறி வருகின்றனர்.
ஈரான் மீது போர் தொடுப்பது என்பது தற்போதைக்கு சவாலான விஷயம் என்பதே சர்வதே போர் வல்லுநர்களின் கருத்து.
இருப்பினும் ஈரான் மீது கடும் தடைகளை விதிக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் போர் உட்பட அனைத்து அம்சங்களையும் பரிசீலிப்போம் என்றும் அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் லியர் வெயின்ரூப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் தயாரிக்கும் இடங்களாக கருதப்படுகிற நடான்ஸ், போர்டோ, அரக், இஸ்பஹான் ஆகிய 4 இடங்களைத்தான் இஸ்ரேல் குறி வைத்துத் தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு 3 பாதைகள் உள்ளன.
துருக்கியின் வடபகுதி வழியாக செல்வது, சவூதி அரேபியான் தென்பகுதி வழியாக செல்வது, ஜோர்டான் மற்றும் ஈராக் வ்ழியாக சென்று தாக்குதவது. இதில் ஈராக் வழியாக செல்வது என்பது இஸ்ரேலிலிருந்து நேரடியாக தாக்குதல் நடத்துவதாகும்.
ஆனால் ஈராக்கின் வான்வழி என்பது அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் சிக்கலானதாக இருக்கக் கூடும். இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஈராக் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரி ஒருவர், இஸ்ரேலிய போர் விமானங்கள், ஈராக் வான்வழியைப் பயன்படுத்தினால், ஈராக் வழிமறிக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிடம் அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் இருந்தபோதும் இத்தனை ஆயிரம் மைல்கள் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் பற்றியும் ஆராயப்படுகிறது.
இஸ்ரேலிடம் அமெரிக்க தயாரிப்பு கேசி-707 டாங்கர்கள் 8 இருக்கின்றன. ஆனால் இவை முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ளனவா? ஈரான் மீது போர் தொடுத்தால் இவை பயன்படுத்தப்படுமா? என்பது சந்தேகம் என்கிறார் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர் ஸ்காட் ஜான்சன்.
இதேநேரத்தில் ஈரான் பதிலடி கொடுத்தால் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் விவாதித்து வருகின்றன.
ஈரான் பதிலடி கொடுத்தால்..
இஸ்ரேல் குண்டுகள் இலக்கை தாக்கும் முன்பே அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் ஈரானிடம் உள்ளது. அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருந்தால் இஸ்ரேலுக்கான பதிலடி என்பது மிக மோசமான விளைவுகளை உருவாக்கிவிடக் கூடும் என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள். சதாம் உசேன் ஒன்றுமே இல்லாமல் அமெரிக்காவை பயமுறுத்தி வந்தார். ஆனால் ஈரான் அப்படி அல்ல, கைவசம் ஆயுதங்களை வைத்திருப்பதால்தான் அமெரிக்காவே கூட ஈரான் விஷயத்தில் அவசரம் காட்ட தயங்குகிறது என்கிறார்கள்.
இதேபோல் இஸ்ரேலிடம் இருக்கும் 5 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள ஜிபியூ குண்டுகளால் மலைகளுக்கு இடையே 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட ஈரானின் அணு உலைகளை தகர்க்க முடியுமா என்பதும் சந்தேகமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
அதேசமயம் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துவிட்டால் அது சாத்தியமான ஒன்றுதான். அதற்கான வல்லமை அமெரிக்காவிடம் இருக்கிறது. கத்தார் வான்படை தளம், இந்தியப் பெருங்கடலில் உள்ள டிகாகோ கார்சியோ தீவு அல்லது இங்கிலாந்து நாட்டு தளங்களிலிருந்து போர் விமானங்களை இயக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே பெர்சியன் வளைகுடாவுக்கும் ஹோர்முஸ் ஜலசந்திக்கும் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியிருப்பதையும் அமெரிக்காவுக்கு சாதகமான அம்சமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எப்படியிருப்பினும், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கும், இஸ்ரேல் போர் தொடுப்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாக உள்ளது. இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்தால் அதற்கான கடும் விளைவுகளை நிச்சயம் சந்திக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஈரானும் நல்ல பலத்துடன் இருப்பதால், இஸ்ரேல்-ஈரான் போர் என்பது மிகப் பெரிய பாதிப்புகளை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
No comments:
Post a Comment