கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஏனைய இடங்களில் சம்பவிக்கும் மரணங்கள் தொடர்பாக, துரித விசாரணை நடாத்தி, சடலங்களை உறவினர்களிடம் தாமதமின்றி கையளிப்பது தொடர்பில் நிலவும் குறைபாடுகள் பற்றி, நீதியமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீமுக்கும், கொழும்பு மரண விசாரணை அதிகாரி எட்வர்ட் அஹங்கம ஆகியோருக்கிடையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறைபாடு இனங்காணப்பட்டு, அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கும், இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதுடன், அவ்வமைச்சுகள் தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தின்போதும், இவ்விடயங்கள் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, தீர்வு காண்பதென்றும், தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மரண பதிவுகள், இரவு வேளைகளிலும், வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் ரவூப் ஹகீம், இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சருடன் கலந்துரையாடி, தீர்வு காணவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
மரணங்கள் சம்பவிக்கும்போது, இறந்தவர்கள் தூர இடங்களை சோந்தவர்களாக இருந்தால், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசாரித்து, சடலங்களை துரிதமாக ஒப்படைப்பது தொடர்பில், பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அமைச்சர் ஹகீம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment