பொகவந்தலாவை - சீனாக்கலைத் தோட்ட தேயிலைச் செடிகளுக்கிடையில் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று 21 ஆம் திகதி காலை வேளையில் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
பொகவந்தலாவை சீனாகக்லைத் தோட்டத்துக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கின்ற மாணவி ஒருவர் இன்று காலை வேளையில் சீனாக்கொலை டி.பி. டிவிசன் தோட்டத்திலிருந்து பாடசாலைக்கு வந்து கொண்டிருந்ததாகவும் அதன் போது கறுப்பு நிற ஆட்டோவில் வந்த நான்கு பேர் மாணவியைத் தேயிலைச் செடிகளுக்கிடையில் இழுத்துச் சென்றதாகவும்,
அதன் பின்பு தனது வாயையும் கைகளையும் கழுத்துப் பட்டியாலும் தலை ரிபனாலும் கட்டிவிட்டு சென்று விட்டதாகவும் அதன் பின்பு தேயிலை மலையில் தேயிலைப் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குறிப்பிட்ட மாணவியைக் கண்டு மீட்டதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பிட்ட மாணவியைத் தொழிலாளர்கள் காலை 9 மணியளவில் கண்டு அருகிலுள்ள பாடசாலையின் அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அதிபர் இவ்விடயம் தொடர்பாக பொகவந்தலாவைப் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மாணவியிடம் பொகவந்தலாவைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதோடு மாணவியை வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன் பின்பு மேலதிக வைத்திய பரிசோதனைக்காக குறிப்பிட்ட மாணவி நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவி மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு வாரத்துக்கு முன்பு குறிப்பிட்ட பாடசாலையின் தரம் ஒன்பதுக்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் சீனாக்கலைத் தோட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து இந்த மாணவி பாடசாலைக்கு வந்துகொண்டிருந்தார் என்றும் தெரிய வருகின்றது.
குறிப்பிட்ட மாணவிக்கு ஏற்பட்ட இந்தச்சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவைப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலைமை காணப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொகவந்தலாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment