Tuesday, February 7, 2012

மனித உரிமை அமைப்புக்கள் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது. மஹிந்த சமரசிங்க.

இலங்கை குறித்து, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவதூறு பிரசாரம் மேற்கொள்வதாக, குற்றம் சாட்டியுள்ள அமைச்சர், சுவிட்சர்லாந்தில் இம்மாதம் நடக்க உள்ள ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கை மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்ததாக கூறப்படுகின்ற, போர்க் குற்ற நடவடிக்கைகள் குறித்து, ஐ.நா., வின் நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ள இலங்கை அரசு கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க கமிஷன் (எல்.எல்.ஆர்.சி.,) என்ற பெயரில் தனியாக, ஒரு குழு அமைத்து விசாரித்தது. ஆணைக்குழுவானது தனது விசாரணை முடிவில் நீண்டதோர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையை உலகின் பல நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் வரும் ஐ.நா அமர்வுகளில் குறிப்பிட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க , இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கி வரும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு, இலங்கை பற்றி அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இது எதிர்பார்த்தது தான். இதுபோன்ற அமைப்புகள், இலங்கைக்கு எதிரான பிம்பத்தை உருவாக்க முயல்கின்றன. கவுன்சிலின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், இதுபோன்ற பிரசாரங்களை இந்த அமைப்புகள் திட்டமிட்டு நடத்துகின்றன. அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை, அரசு அமல்படுத்தியுள்ளது. அனைத்துப் பரிந்துரைகளையும், இரு மாதங்களில் அமல்படுத்துவது என்பது இயலாது. கவுன்சிலில், இதுகுறித்து பேசி மேலும் கால அவகாசம் கேட்கப்படும். இவ்வாறு சமரசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment