Wednesday, February 29, 2012

வன்னி தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கை வடமாகாண ஆளுநர் உறுதி

வன்னி தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திடம் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் எ.சந்திரஸ்ரீ உறுதி அளித்தார்.

யாழ் குடாநாட்டில் இருந்து பதிலீட்டு ஆசிரியர்கள் அனுப்பப்படுவதால் தொண்டாசிரியர்கள் தமது நியமனத்தை இழக்க வேண்டியேற்படும் என்றும், வன்னி பகுதியில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்கவேண்டுமென்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுநர் வன்னி பகுதியில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூத்தியாகியுள்ளன என்றும் அது உடனடியாக நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.

யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வடமாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆளுநரின் ஒன்று கூடலில் இதுபற்றி எடுத்துக் கூறப்பட்டது.

இந்த ஒன்றுகூடலில் ஆளுநரின் செயலாளர் திரு.எல்.இளங்கோவ, பிரதமசெயலாளர், கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், உதவிச்செயலாளர்கள், மாகாணக் கல்விப்பணிப்பாளர்,மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாணத்தின் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வன்னிப்பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து யாழ் குடாநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியர்களின் விபரமும் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வலயங்களில் இருந்தும் உட்செல்லும், வெளியேறும் ஆசிரியர்களின் விபரங்களை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அளுநரிடம் தெரிவித்தனர்.

இதைவிட ஆசிரியர்களுக்கான உள்ளக இடமாற்றம் வன்னி இடமாற்றத்தின் பின்னர் நடைபெறவேண்டுமென்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதுதொடர்பில் முறையான நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொண்டார்.

இதைவிட அதிபர்களின் இடமாற்றமானது மே மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்காக ஆசிரிய தொழிற்சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டு ஒருமுறையான நடைமுறைக்கூடாக அது நடைபெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வன்னிப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களில் இடமாற்றத்திற்கு தகுதியானவர்களை ஆசிரிய தொழிற் சங்கங்களின் பிரசன்னத்துடன் சரிசெய்து மார்ச் மாதம் 15ஆந்திகதிக்கு முன்னர் தம்மிடம் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

(காரைதீவு நிருபர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com