பின்லேடன் கொல்லப்பட்ட போட்டோ: கையை பிசைகிறது சி.ஐ.ஏ.
பின்லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தொடர்பான வழக்கு, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் சி.ஐ.ஏ. மிகக் கடுமையாக போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டோக்களில், பின்லேடன் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உள்ள போட்டோ ஒன்றும், பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றும் அடங்கும் என்று கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. (தற்போது இன்டர்நெட்டில் உலாவும், பின்லேடனின் கொல்லப்பட்ட உடல் போட்டோக்கள் அனைத்தும் போலி)
சி.ஐ.ஏ.யால் எடுக்கப்பட்ட இந்த போட்டோக்கள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு, சில மாதங்களுக்குமுன், லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் வைத்து காண்பிக்கப்பட்டது. ஆனால், பெதுமக்கள் பார்வைக்கு இந்த போட்டோக்களை வெளியிடுவதில்லை என்று சி.ஐ.ஏ. முடிவு செய்திருந்தது.
சி.ஐ.ஏ.-யின் இந்த முடிவுக்கு எதிராக Judicial Watch அமைப்பு தொடுத்திருந்த வழக்குதான் இந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்க தகவல் அறியும் சட்டப் பிரிவின் அடிப்படையில் சி.ஐ.ஏ.-க்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. “பின்லேடன் கொல்லப்பட்டது என்பது ஒரு சரித்திரபூர்வமான நிகழ்வு. அதை முழுமையாக அறிந்துகொள்ளும் உரிமையும், அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்க்கும் உரிமையும் ஒவ்வொரு அமெரிக்கப் பிரஜைக்கும் உள்ளது” என்று தனது மனுவில் கூறியுள்ளது Judicial Watch அமைப்பு.
சி.ஐ.ஏ. தரப்பு தமது வாதத்தில், “பின்லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம். அமெரிக்க சொத்துக்களுக்கும், அமெரிக்கர்களின் உயிர்களுக்கும் அழிவு ஏற்படுத்தப்படலாம்” என்று கூறியுள்ளது.
பதில் வாதம் செய்த Judicial Watch, “அழிவு ஏற்படலாம் என்பதை ஊக அடிப்படையிலேயே சி.ஐ.ஏ. சொல்கிறது. போட்டோக்களை வெளியிடுவதால் அமெரிக்காவுக்கு எதிராக வன்முறை வெடித்தது என்று கடந்த காலத்தில் எந்த சம்பவத்தையும் ஆதாரமாக காட்ட முடியாது” என்கிறது.
சி.ஐ.ஏ.-க்கு எதிரான இந்த வழக்கு, சில மாதங்களுக்குமுன் தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் சில அம்சங்களுடன் ஒத்திருக்கிறது என்றும் கோர்ட்டில் சி.ஐ.ஏ. கூறியுள்ளது. இவர்கள் குறிப்பிடும் அந்த வழக்கு, “அமெரிக்காவுக்கு வெளியே சி.ஐ.ஏ. நடத்திய விசாரணை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட வேண்டும்” என்று, American Civil Liberties Union தொடுத்திருந்த வழக்கு.
அந்த வழக்கில் சி.ஐ.ஏ.-க்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் சி.ஐ.ஏ. தமது தரப்பு சாட்சியாக அழைத்தவர்களில் ஒருவர், ஸ்டீபன் ஆஃப்ரர்குட். இவர், அமெரிக்க விஞ்ஞானிகளின் ரகசிய காப்பு ப்ராஜெக்ட்டின் டைரக்டர். ஸ்டீபன் தனது சாட்சியத்தில், “சித்திரவதை செய்யப்படும் போட்டோக்களை வெளியிடுவது கெட்ட ரசனை (“bad taste”) என்று குறிப்பிட்டது, கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் சி.ஐ.ஏ.க்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியதற்கு ஸ்டீபனின் இந்தப் பதிலும் ஒரு காரணம்.
அதை இவ்வளவு விலாவாரியாக ஏன் சொல்கிறோம் தெரியுமா? பின்லேடன் போட்டோ வழக்கு தொடர்பாக அதே ஸ்டீபன் தனது தனிப்பட்ட கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பின்லேடன் போட்டோ வெளியிடப்படுவது கெட்ட ரசனை என்ற வகையில் இல்லாமல், சரித்திர நிகழ்வு பற்றிய தகவல் அறிவது என்ற வகையில் வருகிறது. போட்டோ வெளியானால், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என்று சி.ஐ.ஏ. கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்-காய்தாவும் தலிபானும் எமக்கு (அமெரிக்காவுக்கு) எதிராக ஏற்கனவே யுத்தம் புரிந்துகொண்டுதானே உள்ளார்கள்? போட்டோ வெளியானால், இதைவிட அதிக கடுமையாக முயற்சி எடுத்து போராட போகிறார்களா?” என்பது அவரது கேள்வி.
பின்லேடன் போட்டோ வழக்கை தொடுத்துள்ள Judicial Watch அமைப்பு, ஸ்டீபனை தமது தரப்பு சாட்சியாக அழைக்கலாம் என்று தெரிகிறது. சி.ஐ.ஏ. தேவையில்லாமல், பழைய வழக்கு பற்றி பிரஸ்தாபித்து, தானே சிக்கிக் கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment