Friday, February 3, 2012

கால்பந்து போட்டியில் கலவரம் எகிப்து நாட்டில் 75 பேர் பலி

எகிப்து நாட்டில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. கால்பந்து விளையாட்டு அணி ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. வன்முறைக்கு 75 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள், இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றன. போர்ட் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியும், உள்ளூரை சேர்ந்த அல் மஸ்ரி அணியும் மோதின. அதில் உள்ளூர் அணி அபார வெற்றி பெற்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதனால் வெளியூர் ரசிகர்கள் மற்றும் அல் அலி கிளப் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். போட்டி முடிவு தெரிந்த அடுத்த விநாடியில் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் ஓடினர். இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தடுப்பு கம்பிகள், கோல் போஸ்ட், நாற்காலிகளை பிடுங்கி எடுத்து சரமாரியாக வீசினர். ஸ்டேடியத்தில் இருந்த நாற்காலிகள், கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

மோதல் ஏற்படும் என எதிர்பாராததால் போலீசார் குறைந்த அளவிலேயே இருந்தனர். வன்முறையை அவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்த மோதலில் 75 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் பரவியதால், தலைநகர் கெய்ரோவில் கால்பந்து நடக்கும் மைதானத்திலும் ரகளை ஏற்பட்டது. குண்டுகள் வீசப்பட்டதால், மைதானம் போர்க்களம் போல மாறியது. ரசிகர்கள் சிதறி ஓடினர்.

கலவரத்தை அடக்க ராணுவ விமானங்களில் வீரர்கள் அனுப்பப்பட்டனர். மற்ற போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, எகிப்து நாடாளுமன்றம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. கால்பந்து போட்டிகளில் கலவரம் வெடித்தது வரலாறு காணாத நிகழ்வு என்று அமைச்சர் ஹேஷம் ஷேகா கூறினார். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்ட இடங்களில் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment