Friday, February 3, 2012

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் நாளை

நாளை இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினம் பிரமாண்டமாக கொண்டாடப் படவுள்ளது. 'ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப் பொருளில் இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தையிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு, அநுராதபுரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி.எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரட்ன திவுல்கனே வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தவிர 200 வெளிநாட்டு தூதுவர்கள்,பிரதிநிதிகள், 300 மதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இரண்டாயிரம் பேர் உட்பட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம், பொலன்னறுவ, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 கலாசார குழுக்களைச் சேர்ந்த 2552 நடன மற்றும் நாட்டியக் கலைஞர்களும் பாடசாலை மாணவ, மாணவிகளும் பிரதான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி

இதேவேளை, தந்திரிமலை, ஒயாமடுவில் நடைபெறவுள்ள (தயட்ட கிருள) தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிற்பகல் 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

4ஆம் திகதி ஆரம்பமாகும் இக்கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியை முன்னிட்டு ஐயாயிரம் பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com