சென்னை வங்கிகளில் கொள்ளயைடித்த 5 கொள்ளயைர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.
சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து இன்று சுட்டு வீழ்த்தினர். ஹாலிவுட் திரைப்படங்களையும் மிஞ்சும் வகையில் இன்று அதிகாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த என்கவண்ட்டர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரும் வங்கிக் கொள்ளைகள் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. ஜனவரி 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் புகுந்து ரூ. 20 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 14 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்களை பெரும் சவாலாக கருதிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பிறவங்கிகளில் பதிவான கண்காணிப்பு காமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்ததில் கொள்ளையர்கள் இருவர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டதை உணர்ந்த போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர்.
மேலும் கொள்ளையர்கள் குறித்த விவரத்தையும் வெளியிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்று கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இதற்கு உடனடி பதில் கிடைத்தது.
சென்னை வேளச்சேரி பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி, ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன.
இதையடுத்து பெரும் போலீஸ் படை அந்த வீட்டுக்கு விரைந்தது. உள்ளே பதுங்கியிருந்த கொள்ளையர்களை நாலாபுறமும் முற்றுகையிட்ட போலீஸார் கொள்ளையர்களை சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் வரவில்லை. மாறாக, போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த சண்டையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி மற்றும் ரவி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் மற்றும் சரிகர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் சரிகர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன்.மற்ற நால்வரும் உ.பி. அல்லது பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
ரூ. 14 லட்சம் மட்டும் சிக்கியது
என்கவுண்ட்டர் நடந்த வீட்டிலிருந்து ரூ. 14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 துப்பாக்கிகளும் கிடைத்தன. இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவன். படித்து முடித்து விட்டு ஊருக்குச் செல்லாமல் இங்கிருந்தபடி கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளான்.
இரு வங்கிகளிலும் கொள்ளை போன பணம் மொத்தம் ரூ. 34 லட்சமாகும். இதில் ரூ. 14 லட்சம் மட்டும்தான் கிடைத்துள்ளது. இது கீழ்க்கட்டளை வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று தெரிய வந்துள்ளது. பெருங்குடி வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. அதை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதிகளில் சோதனையிட போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!
சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படும் அதேசமயம் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஐவரையும் கொல்லாமல் உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தியிருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கண் விழித்தெழுந்த மக்களை இந்த செய்தி அதிர வைத்தது. இதுகுறித்து வேளச்சேரி பகுதி மக்கள் கூறுகையில், எங்களுக்கு அருகேயே இந்த பயங்கரக் கொள்ளையர்கள் வசித்து வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இருப்பினும் போலீஸார் துரித கதியில் செயல்பட்டு அவர்களை சுட்டுக் கொன்றிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது. மக்களைத் தாக்குவோம் என்று கொள்ளையர்கள் கூறியதால் அவர்களை சுட்டுக் கொன்றதாக போலீஸார் கூறியுள்ளனர். எனவே விபரீதம் நடப்பதற்கு முன்பே போலீஸார் செயல்பட்டிருப்பது வரவேற்புக்குரியது என்றனர்.
இதே போல சென்னை மக்கள் பலரும் கூட இது சரியான நடவடிக்கைதான் என்று வரவேற்றுள்ளனர். இனிமேலாவது கொள்ளையடிக்கும் எண்ணம் யாருக்காவது இருந்தால் அதை கைவிடுவார்கள் என்று நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அதேசமயம், இந்த என்கவுண்டரை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இது சட்டவிரோதமான கொலை என்பதில் சந்தேகமில்லை. நேற்றுதான் ஒரு குற்றவாளியின் போட்டோவை சென்னை போலீஸ் கமிஷனர் காட்டி வெளியிட்டார். ஆனால் பத்து மணிநேரத்திற்குள் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், போலீஸ் கமிஷனர் நேற்று காட்டிய நபரைத் தவிர மேலும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்பது எப்படி நிரூபிக்கப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை, நிரூபிக்கவில்லை.
மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் தங்கியிருந்த வீடு என்பது குறுகலான சந்தில்தான் அமைந்துள்ளது. போலீஸார் பெருமளவில் அந்த இடத்தை முற்றுகையிட்டிருந்தனர். எனவே ஐந்து பேரும் நிச்சயம் தப்பி ஓட வாய்ப்பில்லை. அப்படி இருக்கையின் ஏன் என்கவுண்டர் செய்ய வேண்டும். அவர்களை உயிரோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியாகத்தான் தண்டித்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் போலீஸாரோ, மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment