சி.ஐ.ஏ.-யின் எதிர்ப்பையும் மீறி, பின்லேடனின் ‘கொல்லப்பட்ட’ போட்டோக்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க அரசுக்கு ஏற்படப் போவதாக கூறப்படுகின்றது. சி.ஐ.ஏ. வசமுள்ள போட்டோக்களில் எத்தனை போட்டோக்களை வெளியிட்டால் பாதிப்பு ஏற்படாது என்ற டிஸ்கஷன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நீதிமன்றம் சென்றுள்ள இந்த போட்டோ விவகாரம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அனைத்து போட்டோக்களையும் கிளாசிஃபைட், சீக்கிரெட் என்ற போர்வைக்குள் கொண்டுவர சி.ஐ.ஏ. கடுமையாக முயற்சிக்கிறது.
இந்த வழக்கில் சி.ஐ.ஏ.-யின் வசம் மொத்தம் எத்தனை போட்டோக்கள் உள்ளன என்ற விபரத்தை தாக்கல் செய்யுமாறு, சி.ஐ.ஏ. கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த விபரங்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சி.ஐ.ஏ.-யின் தேசிய ஆபரேஷன் டைரக்டர் ஜான் பென்னட்டால் எழுதப்பட்ட குறிப்புகளின்படி, சி.ஐ.ஏ.-யிடம், பின்லேடன் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட மொத்தம் 52 போட்டோக்கள் உள்ளன. இவற்றில் சில போட்டோக்கள் போஸ்ட்மோட்டம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட முழு உருவப் படங்கள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட்மோர்ட்டம் போட்டோக்களில் ஒன்றில் பின்லேடனின் தலையில் துப்பாக்கி தோட்டாவால் ஏற்பட்ட காயம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் பென்னட்டின் குறிப்பில் உள்ளது.
பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட உடனே நிச்சயமாக சில போட்டோக்கள் எடுக்கப்பட்டிருக்கும். அந்த போட்டோக்கள் தொடர்பான விபரங்கள் இந்தக் குறிப்பில் இல்லை. (லைவ் ஆபரேஷனில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சி.ஐ.ஏ. கணக்கு காட்டாது என்பது எமது ஊகம்)
பின்லேடனின் உடல் இஸ்லாமிய மதச் சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே கடலில் போடப்பட்டது என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அந்த போட்டோக்களும், இந்த 52 போட்டோக்கள் என்ற எண்ணிக்கையில் அடங்குகின்றன. அமெரிக்க பிரைவஸி சட்டத்தின்படி, மதச் சடங்குகள் தொடர்பான போட்டோக்களை, அதில் சம்மந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வ நபர் ஒருவர் ஒரு ரிட் போடுவதன் மூலம், வெளியாகாமல் தடை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல, போஸ்ட்மாட்டம் இமேஜ் போட்டோக்கள் வெளியிடப்படுவதை யாரும் விரும்பப் போவதில்லை. அதற்காகதான் ‘போஸ்ட்மோட்டம் செய்யப்படும்போது எடுக்கப்பட்ட முழு இமேஜ் போட்டோக்கள்’ என்று சி.ஐ.ஏ. அழுத்தம் கொடுத்துள்ளது.
சி.ஐ.ஏ. தம்மிடம் உள்ளதாக கணக்கு காட்டியுள்ள 52 போட்டோக்களில் இவை எல்லாவற்றையும் தவிர்த்து விட்டால் எத்தனை போட்டோக்கள் மிஞ்சும் என்பதே தற்போது உள்ள கேள்வி.
அமெரிக்க நீதித்துறையின் Office of Information and Privacy முன்னாள் தலைவர் டான் மட்காஃப், “இந்த போட்டோக்களை வெளியிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நான் கவனமாக பார்த்தேன். போட்டோக்கள் வெளியிடப்படுவதை தடுக்க முடியாதபடி அந்த மனு திறமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏதாவது போட்டோக்களை சி.ஐ.ஏ. வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதே எனது ஊகம்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment