Tuesday, February 7, 2012

அமெரிக்க கப்பல்களில் வைரஸ் கிருமிகள். 500 பயணிகள் பாதிப்பு.

அமெரிக்க கப்பல்களில் வைரஸ் கிருமி பரவியதால், 500க்கும் அதிகமான பயணிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது போர்ட் லாடர்டேல் துறைமுகம். கரீபியன் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கிரவுன் பிரின்சஸ் என்ற கப்பல் துறைமுகம் வந்தடைந்தது. அதில் ஊழியர்கள், பயணிகள் என 3,100 பேர் இருந்தனர். அவர்களில் 364 பயணிகளும் 30 ஊழியர்களும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ரூபி பிரின்சஸ் என்ற கப்பல் வந்தது.

அதில் 3,000 பேர் இருந்தனர். அவர்களில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் துறைமுகத்தில் வந்திறங்கினர்.

இதுகுறித்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் ஜூலி பென்சன் கூறுகையில், ÔÔபயணிகள், ஊழியர்கள் உடல்நலம் பாதிப்புக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து வருகிறோம். இந்த விஷயத்தில் மருத்துவ குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். கப்பல்களில் வைரஸ் கிருமி பரவியதாக தெரிய வந்தது. உடனடியாக 2 கப்பல்களையும் முழுமையாக சுத்தம் செய்து விட்டோம்.

கிருமி பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுÕÕ என்றார். சம்பந்தப்பட்ட பயணிகள், ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர்கள் Ôநோரோ வைரஸ்Õ கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வைரஸ் கிருமி கெட்டுப் போன உணவு, மாசடைந்த தண்ணீர் மூலம் பரவுகிறது. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் தொற்றி கொள்ளும். கிருமி படிந்த பொருளை தொட்டாலும் தொற்றிக் கொள்ளும். காற்றில் வேகமாக பரவுகிறது.

வழக்கமாக இதுபோன்ற வைரஸ்கள், காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத இடங்களிலேயே அதிகமாக பரவுகிறது. குறிப்பாக சிறை, மருத்துவமனைகள், முகாம்கள், விடுதிகள், கப்பல்கள், விமானங்கள், ரயில்களில் இந்த கிருமி எளிதில் தொற்றிக் கொள்ளும். இதனால் வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com