டோகோவில் இருந்து 28 பேர் இலங்கை திரும்புகின்றனர்: ஐ.ஓ.எம்.
கனடாவில் அகதிகளாக குடியேறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயணத்தின் வழியில் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் பிடிப்பட்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கையரில் இரண்டாவது தொகுதியாக 28 பேர் இலங்கை திரும்புவதற்காக சனிக்கிழமையன்று டோகோவிலிருந்து கிளம்பியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டோகோ அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 209 பேரில் 9 பேர் ஏற்கனவே அண்மையில் இலங்கை திரும்பிவிட்டிருந்தனர்.
டோகோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையரில் தற்போதைய நிலையில் மொத்தம் 164 பேர் நாடு திரும்ப முன்வந்துள்ளனர் என்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த சர்வதேச குடியேறிகள் உதவி அமைப்பான ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.
இவர்களில் 67 பேர் சுயமாக நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கும் படிவத்தில் கையெழுத்திட்டு அதற்குரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்றும், 45 பேர் விருப்பப் படிவத்தில் கையெழுத்திட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக காத்திருக்கின்றனர் என்றும், 3 பேர் டோகோவிலேயே அரசியல் தஞ்சம் கோர முடிவெடுத்துள்ளதாகவும், வேறு 42 பேர் தஞ்சம் கோருவதா, இல்லை நாடு திரும்புவதா என்று இன்னும் தீர்மானிக்காமல் இருக்கிறார்கள் என்றும் ஐ.ஓ.எம். தகவல் வெளியிட்டுள்ளது.
டோகோவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையரில் நான்கு பேர் தற்போது அங்கிருந்து தப்பிவிட்டார்கள் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி பிபிசி
0 comments :
Post a Comment