Saturday, February 11, 2012

ஆட்கடத்தல் - ஐரோப்பாவில் பாரிய கூட்டு நடவடிக்கை – 27 பேர் கைது

சிறிலங்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தும் வலையமைப்பைக் குறிவைத்து மூன்று ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து – ஐரோப்பிய காவல்துறை (Europol) மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், தமிழர்கள் உள்ளிட்ட 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய காவல்துறை தலைமையகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பின்லாந்து எல்லைக் காவல்படை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள், பிரெஞ்சுக் காவல்துறை, பெல்ஜியம் சமஸ்டி காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து - சிறிலங்காவின் குற்றவியல் வலையமைப்பின் மீது கடந்த திங்கட்கிழமை காலை ஒரு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய காவல்துறை கூறியுள்ளது.

சிறிலங்காவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, தன்சானியா, துருக்கி வழியாக பின்லாந்துக்குள் நுழைந்து அங்கிருந்து பிரான்சுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழைகின்றனர்.

இந்த வலையமைப்பை உடைக்க நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் போது 27 சந்தேகநபர்கள் பின்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் பிரதான இலக்காக இருந்த சரண் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர், சட்டவிரோத குடியேற்றங்களுக்கு உதவியதாக பாரிஸ் நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டார்.

தேடுதல்களில் ஈடுபட்ட ஐரோப்பிய காவல்துறை அதிகாரிகளால் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் பின்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த 110 இற்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த 2010 டிசம்பரில் இந்தியக் கடவுச்சீட்டுடன் வந்த சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பின்லாந்து எல்லைக்காவல் படையினரிடம் சிக்கியதை அடுத்து இந்த கூட்டு நடவடிக்கை ஆரம்பமாகியது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறிலங்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் ஆட்களைக் கடத்தும் வலையமைப்பு தீவிரமாக இயங்குவது கண்டறியப்பட்டது.

பல சட்டவிரோத குடியேற்ற வாசிகள் பிரித்தானிய கடவுச்சீட்டில் மோசடி செய்து தாய்லாந்தில் இருந்து கனடா சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சட்டவிரோத குடியேற்றவாசிகள் எவ்வாறு பிரான்சுக்குள் நுழைகிறார்கள் என்று கடந்த ஒரு ஆண்டாக பின்லாந்து வளைகுடா கரையோரக் காவல்படையும் பிரெஞ்சு எல்லைக் காவல்துறையும் கண்காணித்து வந்ததாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது பிரான்சில் அதிகபட்சமாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்லாந்தில் ஆறு பேரும் பெல்ஜியத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்ட இந்த நடவடிக்கைக்கு பின்லாந்தில் தலைமையேற்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் லெப்டினன்ட் ஜுக்கா தெக்கோஸ்கி, “கைது செய்யப்பட்ட அனைவருமே சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் பின்லாந்து குடியுரிமை பெற்றவர்கள்.

பின்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட உதவிகளையே செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக தங்குமிட மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களில் சிறிலங்காவில் இருந்து ஒருவரை ஐரோப்பாவுக்கு அழைத்து 30 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையான யூரோக்களை வசூலித்துள்ளனர்“ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment