பிறந்தநாள் பரிசு வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்கும் படி முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 3 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1992ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து போது ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசு பெற்றதாக வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவுக்கு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்தியா, வெளிநாடுகளில் இருந்து ஜெயலலிதாவுக்கு காசோலையில் பரிசுத் தொகை வந்தது என்றும் அந்த காசோலைகளை ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும், இதற்கு செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கு 1996ஆம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காணரங்களால் பரிசு பொருள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு 10 ஆண்டுகள் ஆனது.
காலதாமதமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று கூறி ஜெயலலிதா உள்பட 3 பேர் மீதான பிறந்த நாள் பரிசு பொருள் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அல்தமஸ் கபீர், சுரீந்தர் சிங் நிஜ்ஜர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிறந்தநாள் பரிசு வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்கும் படி முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment