Friday, February 3, 2012

அகிம்சை என்னும் அற்புத ஆயுதம்!! (பாகம் 1) சித்திறெஜினா

இம்சையின் எதிர் பதமான அகிம்சையின் வரலாறு இது... இன்று நேற்று ஆரம்பமானதல்ல அகிம்சை.. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் பிறந்தது அது .. கிறிஸ்தவ, பௌத்த, சமண மதங்களின் கொள்கைகளில் இருந்து மலர்ந்தது அது... இந்த மதங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மகாத்மா காந்தி அவைகள் பின்பற்றி வந்த இந்த‌ அகிம்சை கொள்கைகளை சமூக வாழ்வில் மட்டுமல்லாது அரசியல் வாழ்விலும் பின்பற்றினால் நிட்சயம் வெற்றியடைய முடியும் என்பதை உணர்ந்து கொண்டு தான் தலைமை தாங்கி நடத்திய இந்திய விடுதலைப் போராட்டத்தில் இதை முதல் முறையாக‌ உபயோகித்து அதில் மாபெரும் வெற்றியுமடைந்து அகிம்சையின் வல்லமையை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்..

அவரைத் தொடர்ந்து அதை பலரும் பின்பற்றினார்கள்.. சிலர் வெற்றி கண்டார்கள்.. சிலர் தோல்வியடைந்தார்கள். மார்ட்டின் லூதர்கிங்.. நெல்சன் மண்டேலா போன்ற உலகப் பிரசித்தி பெற்ற‌ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் இந்த அகிம்சை என்னும் ஆயுதத்தை உபயோகித்து அமைதி வழியில் தங்கள் போராட்டத்தை நிகழ்த்தி அதில் மாபெரும் வெற்றி கண்டார்கள்.. அதே சமயத்தில் நமது இலங்கைத் தீவில் அன்றைய‌ தமிழரசுக் கட்சித் தலைவர்களும் அவர்களைத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் புலிகளும் தங்கள் சுயநலத்திற்காக‌ இந்த ஆயுதத்தை துர்ப்பிரயோகம் செய்து அதன் விளைவாக‌ தோல்வியை தழுவிக் கொண்டார்கள்.. ஏன் எதற்காக அந்த அகிம்சை வழிப் போராட்டம் அன்று வெற்றி பெறாமல் இப்படி தோல்வியை தழுவிக் கொள்ள நேரிட்டது என்ற காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் அகிம்சை என்ற ஆயுதத்தின் ஆதிமூல வரலாற்றை ஆதியோடந்தமாக‌ அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது..

(இன்று தமிழர்களின் போராட்டத்தை தங்கள் கையிலெடுத்திருக்கும் தமிழர் தேசிய விடுதலை கூட்டணியினர் அந்த அகிம்சையின் அறவழிப் போராட்டத்தை சரியான வழியில் நடத்தி அதில் வெற்றி கண்டால், அத்துடன் தங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்து தங்கள் சகாப்தம் முடிந்து விடுமோ, என்ற அச்சத்தில் அதை ஏறெடுத்தும் பாராமல் சதா இலங்கை அரசுடன் மோதுவதையே தங்கள் கடைமையாக கொண்டிருப்பது வேறு விசயம்)

இங்கே கடந்த கால அரசியல் சரித்திரப் பின்னணிகளுடன் தொடர இருக்கும் அகிம்சை என்ற இந்த‌ அற்புத ஆயுத வரலாறு அது உருவான மதங்களின் ரீதியாக ஆராயப்படாமல்.. அது சமூக அரசியல் கண்ணோட்டத்தில் அறிவியல் ரீதியாக ஆராயப்படுகிறது.. ஆகவே எழுதப்படும் இந்தக் கட்டுரைத் தொடர் எந்த மதத்தவரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை என்பதையும் இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடர் மட்டுமே என்பதையும் இதைப் படிக்கின்ற வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.....

ஆச்சரியமான அகிம்சை என்னும் ஆயுதத்தின் வரலாற்றில் முதலாம் அத்தியாயம் இது..

இதோ இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளைஞனால் பாலஸ்தீனத்தில் பவ்வியமாக உருவாக்கப்படுகிறது அணு ஆயுத்தைவிட வலிமை வாய்ந்த அந்த அகிம்சை என்னும் ஆயுதம்..

எருசலேம் நகரத்தின் கிழக்கு வானத்தில் கம்பீரமாக உதயமாகிய உதய சூரியனின் காலைக் கதிரில் அந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் படர்ந்திருந்த‌ ஒலிவ‌ மலைத் தொடரை மூடியிருந்த மாலைப் பனிக் கூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது...காலை வானத்தை அலங்கரித்ததுப் பறந்தன நீலவானப் பறவைகள்.. அவைகள் எழுப்பிய ஆரவாரத்துடன் சேர்ந்து ஒலித்தது நகரத்தின் மத்தியில் இருந்த‌ அந்த தேவாலத்தின் மணியோசை... வாரத்தின் இறுதி நாளான அந்த‌ ஞாயிறு காலையில் வழக்கத்திற்கு மாறாக பெரும் திரளான மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது தேவாலயம் ...

ஒருவன் உன் பல்லை உடைத்தால்.. அதற்குப் பதிலாக அவனது பல்லை உடைத்து விடு.. ஒருவன் உன் கண்ணை குத்திக் கெடுத்தால் அதற்குப் பதிலாக அவனது கண்ணைக் குத்திக் குருடாக்கி விடு.. கையும் மெய்யுமாக ஒரு திருடன் பிடிபடுகிறானா.. திருடிய‌ அவன் கைகளை வெட்டித் துண்டாடி விடு.. ஒருத்தி விபச்சாரம் செய்கிறாளா.. அவளை கூடி நின்று கல்லெறிந்து கொன்று விடு.. இப்படிப்பட்ட பல மனித நேயமற்ற‌ செய்கைகள் நிறைந்த‌ கட்டளைகளைத்தான் அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் கடவுளின் கட்டளையாக காலம் காலமாக தங்கள் தேவாலய பிரசங்கங்க‌ளில் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிருந்த‌ விடயங்கள்..

ஆனால் கடந்த சில வாரங்களாக‌ அந்த தேவாலய பிரசங்க மேடையில் புதிதாக ஒரு பிரசங்கி முளைத்திருந்தார்.. இவ்வளவு காலமும் இருந்து வந்த‌ தேவாலய ஒழுங்கு முறைப்படி அங்கு கூடியிருப்பவர்களில் யாரோ ஒருவர் மேடைக்குச் சென்று பிரசங்கம் செய்யலாம் என்ற வழக்கத்தை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த மேடையில் பிரசங்கம் செய்ய முன் வந்திருந்தான் அந்த 33 வயது நிரம்பிய இளைஞன்..

உண்மையில் அந்த தேவாலத்திற்கு வருபவர்கள் அந்த நகரத்தில் இறைவனின் கட்டளைகளை மதித்து அதன்படி வாழ்பவர்கள் என்று அந்த மதத் தலைவர்களால் கருதப்படுவதால்தான் எவரும் பிரசங்கம் செய்யலாம் என்ற ஏற்பாடு அந்த தேவாலயத்தில் செய்யப்பட்டிருந்தது.. ஆம் அந்த தேவாலத்திற்குள் தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்படுவர்கள் எவருமே இதுவரை காலமும் அனுமதிக்கப்பட்டதில்லை.. அப்படிப்பட்டவர்களுக்கு தேவாலய வாசல் படிவரைதான் அனுமதி..

இப்படியாக தங்கள் இனத்திலேயே.. தங்கள் நகரத்திலேயே பிறிதொருவன் தாழ்த்தப்பட்டு கீழ் நோக்கிப் பார்க்கப்படுவதை அந்த தேவாலத்திற்கு வருகின்ற பலரும் வெறுக்கத்தான் செய்தார்கள்.. ஆனால் பாவம் அதைத் தட்டிக் கேட்பதற்குதான் அவர்களுக்கு தைரியம் இருக்கவில்லை.. காரணம் அந்த மதத்தின் தலமைப் பீடம் அப்படிப்பட்டது.. மகா வல்லமை பொருந்திய அவர்கள் மதபீடம் அப்படி தட்டிக் கேட்பவர்களை கடுமையாக‌ தண்டிப்பதற்கு சகல அதிகாரங்களையும் கொண்டிருந்தது..

அப்படி அந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இந்த தீண்டத் தகாதவர்கள் யார்? இதை அந்த மதபீடமே தீர்மானித்திருந்தது.. குஷ்டரோகிகள்.. சப்பாணிகள்.. குருடர் செவிடர் என்று வலது குறைந்தவர்கள் மட்டுமல்லாமல் அந்த நகரத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்களும் வரி வசூலிப்பவர்களும் கூட‌ தீண்டத்தகாத‌ பாவிகளாக கணிக்கப்பட்டிருந்தார்கள்.. அவர்கள் செய்த பாவத்தின் நிமித்தமே அவர்கள் அப்படிப் பிறந்தார்கள்.. படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது அந்த மதத்தின் அசைக்க முடியாத‌ நம்பிக்கை.. இதனாலேயே அவர்கள் அனைவரும் அந்த சமூகத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள்.. இரவு நேரங்களில் ஊருக்குப் புறம்பே வசிக்க வற்புறுத்தப்பட்டார்கள்... இதனால் இந்த பாவிகளாக கருதப்பட்ட அத்தனை பேருமே அந்த‌ வல்லமையுள்ள மத‌த் தலைவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள்..

இந்த அக்கிரமங்களைக் கண்டுதான் வெகுண்டெழுந்திருந்தார் அந்த இளைஞர்.. இது என்ன கொடுமை என்று கொதித்துப் போனார்.. புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதர்களுக்காக களத்தில் இறங்கினார்.. எந்த மனிதனும் இந்த உலக்கத்தில் தீண்டத்தகாத‌ பாவியல்ல‌.. அவர்கள் அனைவரும் மனிதர்களே.. அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று அவர்கள் சார்பின் அந்த கொடுமையான‌ மதக் கொள்கைகளுக்கு எதிராக‌ போர்க்கொடி தூக்கினார்.. அந்த மதக் கொள்கைகளை பரப்பி அதன் மூலம் தங்கள் சொந்த‌ மக்களையே அடிமைகளாக்கிய‌ அந்த மதத் தலைவர்களை எதிர்த்துப் போராட அவர் முடிவு செய்தபோது அவர் ஏந்திய ஆயுதமே அகிம்சை... முதன் முதலாக‌ அதை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பின்னாளில் கடவுளின் குமாரனாக‌ கருதப்பட்ட இயேசு கிறீஸ்து என்னும் அந்த‌ இளைஞன்...

அந்த இளைஞரும் அந்த சமுதாயமும் சார்ந்திருந்த மதமாகிய‌ யூத‌மதம்... நீங்கள் அனைவரும் இறைவனால் விதிக்கப்பட்ட அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியது.. ஆனால் அவரோ எவரும் அந்தக் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.. அவற்றை உங்களுக்கு பதிலாக நானே நிறைவேற்றுகிறேன்.. வேண்டுமானால் உங்களுக்குப் பதிலாக அவர்கள் என்னைத் தண்டிக்கட்டும் என்று கூறினார்.. அந்த‌ யூதமதம் தாழ்த்தப்பட்டவர்களை பாவிகள் என்று முத்திரை குத்தி நீங்கள் அனைவரும் இறைவனின் அடிமைகள் என்ற சிந்தனையை அவர்களுக்கு ஊட்டி அவர்களை தங்களுக்கு அடிமைகளாக்கியிருந்தது.. ஆனால் அவரோ இல்லவேயில்லை நீங்கள் அனைவருமே இறைவனின் பிள்ளைகள் ஆகவே உங்களை எவருமே அடிமைகள் என்று குறிப்பிட முடியாது என்று அவர்களுக்கு தைரியமளித்து உற்சாகமூட்டி அந்த அடிமைத்தனமான சிந்தனைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலையளித்தார்.. இப்படியாக யூதமதக் கொள்கைகளால் குருடர்களாக்கப்பட்டிருந்த அவர்கள் கண்களை தான் உருவாக்கிய கொள்கைகளால் விழிப்படையச் செய்தார் அவர்.. மூட நம்பிக்கைகளில் முடங்கி முடமாகிக் கிடந்தவர்களை நிமிர்ந்தெழுந்து ஒரு சீரான பாதையில் நடக்கச் செய்தார்.....

இப்படியாக உருவாக்கப்பட்ட அந்த இளைஞனின் புதிய புரட்சிகரமான‌ சிந்தனைகளால் பெருந்திரளான இஸ்ரவேலர் கவரப்பட்டு அவரை பின்பற்றத் தொடங்கினார்கள்.... இது அவர்கள் இதுவரை காலமும் பின்பற்றி வந்த யூதமதக் கொள்களுக்கு எதிரானதாகவும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவும் இருந்தது...

அந்த இளைஞன் தனது சமூகத்தை சேர்ந்த உயர்ந்த வர்க்கத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களின் சம‌ உரிமைக்காக குரல் கொடுத்து தனக்கென்று ஒரு மக்கள் கூட்டத்தை சேர்த்ததைபோல மகாத்மா காந்தியடிகளும் அந்த இளைஞனின் வழியைப் பின்பற்றியே தனது அகிம்சை வழிப் போராட்டங்களை ஆரம்பித்தார்.. மகாத்மாவின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் இயேசு கிறிஸ்து என்ற அந்த இளைஞரே..

மகாத்மா காந்தி தான் எழுதிய "சத்திய சோதனை" என்னும் சுயசரிதை நூலில் தான் இங்கிலாந்தில் தன் பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் தனக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பைப் பற்றியும்.. அந்த உறவினால் அவர் அடிக்கடி அவர்கள் பிரார்த்தனை கூட்டங்களில் பங்கு பற்றியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.. மேலும் அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட பைபிளை முற்று முழுதாக‌ படித்தறிந்ததாகவும் அதில் இயேசுவின் மனித நேயம் நிறைந்த அந்த‌ மலைப் பிரசங்கம் தன்னை மிகவும் கவர்ந்து சிந்திக்க வைத்த பகுதி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.. இவைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அந்த இயேசு என்ற இளைஞனின் சாத்வீக சிந்தனைகளைப் பின்பற்றித்தான் அகிம்சை என்னும் ஆயுதத்தை உருவாக்கியிருக்கலாம் என்று எண்ணக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன..

இயேசு என்ற அந்த இளைஞர் யூத மதத்திற்கு எதிராக வன்முறையற்ற‌ தனது பிரச்சாரங்களை ஆரம்பித்த காலப் பகுதியில் அவர் பாலஸ்தீனத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது பல பின் தங்கிய கிராமங்களுக்கும் கால் நடையாகவே பிரயாணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கும் தனது சிந்தனைகளை ஊட்டத் தவறவில்லை.. மேலும் அவர்களையும் பாலஸ்தீனத்தில் உள்ள மற்றவர்களைப் போன்று சமநிலைப்படுத்தும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.. அதே போன்று மகாத்மா காந்தியும் எடுத்தவுடன் தடாலடியாக அகிம்சை வழிப் போராட்டங்களில் இறங்கி விடாமல்.. முதலில் அவர் இந்தியா முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்திய மக்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளின்றி சமநிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.. குறிப்பாக அவருடைய இந்த பயணத்தில் அவர் இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்து அவர்களுக்கும் தேசிய உணர்வை ஊட்டுவதில் சிரத்தை காட்டினார்.. இப்படி அனைவரையும் கூட்டுச் சேர்த்த‌ பின்னர்தான் அவரது அந்த சாத்வீக அகிம்சைப் போர் ஆரம்பமாகி வெற்றி நடை போட்ட‌து...

இயேசு என்ற அந்த இளைஞன் தன்னைத் தானே தாழ்த்தி அந்த தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டது போல... இவரும் இந்தியாவில் வாழ்ந்த ஏழை மக்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டு எளிய உடையை அணிந்து ஒரு சாதாரண இந்திய ஏழை குடிமகனைப் போலவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தார்.. இயேசு உயர்குடி இஸ்ரவேலரால் தாழ்த்தப்பட்டவர்களை "கடவுளின் குழந்தைகள்" என்று அழைத்ததைப் போல காந்தியும் இந்தியாவின் உயர் குடியினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு "ஹரிஜன்" என்று பெயரிட்டார்.. குஜராத்தி மொழியில் ஹரிஜன் என்பது கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தமாகிறது என்பதும் அவரது அகிம்சை வழிப் போராட்டங்கள் அனைத்திலும் கணிசமான அளவு இந்த கடவுளின் குழந்தைகள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..

அன்றைய கால கட்டத்தில் தங்கள் புகழுக்காக அகிம்சையின் போர்வையில் அறப்போர் நிகழ்த்திய தமிழரசுக் கட்சியினர் காந்தி செய்ததைப் போன்று எந்த விதமான முன் ஆயத்தங்களையும் செய்து அந்த போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கவில்லை.. யாழ்ப்பாண மேட்டுக் குடியினரின் தலைமையில் நடத்தப்பட்ட‌ அந்த போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி சற்றேனும் சிந்திக்கப்படவில்லை.. அவர்களும் சராசரி தமிழர்களுக்கு நிகராக மேம்படுத்தப்படவில்லை.. அது மட்டுமல்ல இலங்கையில் தங்களையும் தமிழர்களாக எண்ணி தமிழர்கள் மத்தியில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லீம் இனத்தவர்கள் அந்தப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.. ஆகவேதான் அந்த அகிம்சை வழிப் போராட்டம் ஒரு முதுகெலும்பற்ற போராட்டமாக உருப்பெற்று உருவழிந்து போனது..

இதேபோன்றுதான் புலிகள் காந்தியின் முகமூடியணிந்து அதன் மூலம் தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திலீபனையும் பூபதி அம்மாவையும் அன்று உண்ணாவிரத மேடையில் அமர்த்தி அவர்களை வேண்டுமென்றே அந்த மேடையில் பலி கொடுத்த வரலாறு என் அடுத்த பாகத்தில்.. (தொடரும்)

அன்புடன் சித்திறெஜினா.

1 comments :

Anonymous ,  February 3, 2012 at 2:11 PM  

என்ன சித்திறெஜினா!!! இந்தப் பக்கம் காற்று பலமாக வீச ஆரம்பித்து இருக்கு. நீங்கள் ஒரு இணையத்தளத்தில் தொடராக எழுதும் அணைத்து கட்டூரைகளும் விடாமல் வாசித்து வரும் வாசகன் நான்.அத்துடன் நீங்கள் மேலே எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ///இங்கே கடந்த கால அரசியல் சரித்திரப் பின்னணிகளுடன் தொடர இருக்கும் அகிம்சை என்ற இந்த‌ அற்புத ஆயுத வரலாறு அது உருவான மதங்களின் ரீதியாக ஆராயப்படாமல்.. அது சமூக அரசியல் கண்ணோட்டத்தில் அறிவியல் ரீதியாக ஆராயப்படுகிறது.. ஆகவே எழுதப்படும் இந்தக் கட்டுரைத் தொடர் எந்த மதத்தவரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை என்பதையும் இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடர் மட்டுமே என்பதையும் இதைப் படிக்கின்ற வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.....////
இப்படி முன் கூட்டியே அறிவிப்பது நிட்சயம் இங்கு ஏதோ வில்லங்கமான பதிவுகள் பதியப் போரிர்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. நன்றி

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com