வன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை! லண்டனின் TGTE நவீன உண்டியல்!
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது ஓரு சினிமாப்பாடலின் வரி மாத்திரல்ல நிஜமும் அதுதான். கடந்த 30 வருட கால யுத்தத்தின் வடுக்களை தமிழ் மக்களின் பெரும்பகுதியினர் இறக்கி வைக்க முடியாத சுமையாக சுமந்து கொண்டிருக்கின்றபோது, அதன்பெயரால் ஒரு தொகுதியினர் கால காலமாக சுகபோகம் அனுபவித்து வருவது வெள்ளிடைமலை.
வன்னியில் பயங்கரவாதத்தின் கொடுமையில் சிக்கியிருந்த மக்கள் விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளபோது, புலம்பெயர் தேசத்து போலிப்போர் புகார் மேகங்கள் அவர்களை அச்சுறுத்திய வண்ணமே உள்ளது. புலம்பெயர் தேசத்திலே மேற்கொள்ளப்படுகின்ற வசூலிப்புக்களும், வெற்றுக்கோஷங்களும் இலங்கையில் வாழுகின்ற மக்களின் கஞ்சியில் மண்ணைத்தூவுவதாகவே உள்ளது.
கடந்த 15ம் திகதி லண்டனில் ஒன்று கூடிய நாடு கடந்த தமிழீழ அரசினர் புதிய வேகத்துடன் தமது வசூலிப்பை ஆரம்பித்துள்ளனர். இந்நிகழ்வில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட உண்டியலினை மக்களுக்கு வழங்கிய அவர்கள் உண்டியலை நிரப்பித்தருமாறு கோரியதுடன் இப்பணம்சேகரிப்பதற்கு இரு பிரதான காரணங்களை கூறியுள்ளனர். போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசுக்கு தண்டனை வாங்கிகொடுத்தல் மற்றும் வன்னியிலே கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யதல் என்ற இருகாரணங்களை முன்வைத்தே இப்பணவசூலிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போருக்கென மக்களிடம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அறவிட்ட கோடிக்கணக்கான பணத்தினை முழுமையாக ஏப்பமிட்டுள்ள புலிப்பினாமிகள் தற்போது பணம் அறிவிடுவதற்கு கூறும் கதைகள் நகைப்புக்கிடமானதாக உள்ளது. ஆனால் இந்நகைச்சுவைகளை பேசுகின்றபோது, இவர்கள் முகத்தில் பாதணிகளை கழற்றி வீசாமல் முன்வரிசையில் இருந்து கொண்டு கைதட்டுகின்ற ஏமாளிகள் இருக்கும்வரை இலங்கையில் வாழும் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது.
இவர்கள் நிதி அறிவிடுவதற்காக கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் என்பது ஏற்கனவே தோல்வி கண்ட ஒன்றாக காணப்படுகின்றபோதும், சூடுசொரணை இல்லாமல் தொடர்ந்தும் அதன்பெயரால் பணம் கேட்கின்றார்கள், இவர்கள் சர்வதேச விசாரணை என அழைக்கும் நாடுகள் யாது? நடந்து முடிந்த போர் இலங்கை அரசு தேர்ந்தெடுத்த போரா? அன்றில் இலங்கை அரசின் மீது திணிக்கப்பட்ட போரா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிறு போராட்டக்குழுவாக ஆரம்பித்த ஓர் இயக்கம் புலம்பெயர் தமிழரின் முழுப்பணத்தையும் கொண்டு முப்படைகளையும் கொண்ட உலகின் முதல்தர பயங்கரவாத அமைப்பாக பரிணமித்தபோது, அதை ஒடுக்கு என சர்வதேசத்தால் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை அரசு நிறைவேற்றியது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
புலிகள் இறுதி நேரத்தில் அவயக்குரல் எழுப்பியபோதும் ஏதாவது ஒருநாடு புலிகளின் அழு ஓசையை காதில் வாங்கியதா? மாறாக கதையை முடி என இலங்கை அரசின்பின்னால் ஆயுதங்களுடன் நின்றனர் என்பதுதான் உண்மை. இந்த உண்மை இவ்வாறு இருக்கும்போது, இலங்கை அரசுக்கு எதிராக எந்த அடிப்படையில் இவர்களால் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமுடியும், இலங்கை என்பது எவ்வித ஆயுத உற்பத்தியும் அற்ற, வழர்ந்துவரும் நாடு இந்நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை ஊக்குவித்து தமது ஆயுத விற்பனை மையமாக பயன்படுத்திய நாடுகள் எந்த அடிப்படையில் போர்க்குற்றம் என்றெல்லாம் செல்லமுடியும் என்பதை மக்கள் உணரவேண்டும், ஆசிய பிராந்தியத்தில் மேற்குலகின் மிகநம்பிக்கைக்குரிய செல்லப்பிள்ளையான இந்தியாவின், புலிகளை பழிவாங்கவேண்டும் என்ற முடிவுக்கு எதிராக மேற்குலகு எந்தவொரு சமிக்கையும் காட்டாது என்பதும் வெளிப்படை.
மேலும் வன்னியில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கென பணம் சேகரிக்கப்படுகின்றது. புலம்பெயர் தேசத்திலே இடம்பெறுகின்ற ஒவ்வொரு நிகழ்விலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பணம் அறவிடப்படுகின்றது. ஆனால் இப்பணத்தின் ஒரு சதம்கூட இலங்கை மக்களை சென்றடையவில்லை. மாறாக இப்பணவசூலிப்பு இம்மக்களின் சுதந்திரமான வாழ்வையே கேள்வியாக்கியுள்ளதுடன், அவர்களை புலம்பெயர் தமிழர்களின் சதியினுள் சிக்குகின்றார்களா? ஏன்ற சந்தேக கண்ணுடனேயே நோக்கப்படும் நிலைக்குள் தள்ளியுள்ளது.
கடந்தவாரம் கொழும்பில் நிகழ்வொன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 'புலம்பெயர் தேசத்திலே எஞ்சியுள்ள புலிகள் இலங்கைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றார்கள்' என்ற செய்தி கூட இவ்வெற்றுக்கோஷங்களின் வெளிப்பாடே எனலாம். பாதுகாப்புச் செயலரின் இவ்வெச்சரிக்கையினை தமிழ் மக்களுக்கு திரிவுபடுத்தி வழங்கிய புலிப்பினாமிகள், ஏதோ புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பயப்படுவதான தொனியில் கதையளந்து மக்களை மீண்டும் ஏமாற்றி தமது வசூலிப்புக்கு பயன்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையும் அவதானித்தோம். ஆனால் இலங்கையில் மீண்டும் ஆயுத யுத்தம் என்பது புலம்பெயர்ந்தவர்களின் கனவில்தான் இடம்பெறமுடியும் என தேசிய புலனாய்வுத் துறையின் பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண ஆழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரது கருத்துக்களை நோக்குகின்றபோது, அங்கு அடிக்கப்படுகின்ற எச்சரிக்கை மணியானது, புலம்பெயர் புலிகள் இலங்கையின் இறைமைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப்பிரச்சாரங்களுக்கு எதிரானது என்பது தெளிவாகின்றது.
இந்நிலையில் அண்மையில் இரு தினங்களுக்கு முன்னர் முள்ளியவளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை ஒன்றைப்பற்றி பேசுவது பொருத்தமானது என நினைக்கின்றேன். வாழவேண்டிய வயதில் 29 மற்றும் 27 வயதுடைய ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது. இவர்கள் தற்கொலை செய்வதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றது. ஒன்று வறுமை, இரண்டாமது ஜாதிப்பாகுபாடு. இவையிரண்டுமே இன்று எம்மிடையே தலைவிரித்தாடும் பெரும் பேய்கள். இவ்வாறான பிரச்சினைக்கு எம்மக்களுக்கு புலம்பெயர் புலிப்பினாமிகளிடமிருந்து எவ்வித உதவியும் கிடையாது. புலம்பெயர் தேசத்திலே உண்டியல் குலுக்குவதற்கு எவ்வித பாகுபாட்டினையும் பாராத புலிப்பினாமிகள், அப்பணத்தை கொண்டு இங்கு வாழுகின்ற மக்களை இப்பெரும் பேய்களிடமிருந்து விடுக்க ஏதாவது முயற்சிகளை செய்கின்றார்களா? இல்லை எரியிற வீட்டில் பிடிங்கினது மிச்சம் என நிலைமைகளை மேலும் சிக்கலடையச் செய்கின்றனர்.
மேலும், இன்று வடகிழக்கு பிரதேசத்தில் நிலவுகின்ற வறுமைக்கு காரணம் வேலையில்லாப்பிரச்சினை. ஆனால் புலம்பெயர் தேசமெங்கும் மக்களின் பணத்தை முதலிட்டு அதனூடாக சுகபோகம் அனுபவிக்கும் புலிகள் இங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய விதத்தில் முதலீடுகளை செய்கின்றார்களா? இல்லை. அவ்வாறு யாராவது ஒருவர் இருவர் முதலிடுவதானால் எதனைக் குறிவைக்கின்றனர், எங்காவது மதுபாணச்சாலை ஒன்றை திறக்கமுடியுமா? அன்றில் ஹோட்டல் ஒன்றை கட்டி மக்களிடம் சுரண்ட முடியுமா என்றே பார்க்கின்றனர். இவற்றை சிலர் செய்தும் உள்ளனர்.
இதேநேரம் யுத்தம் முடிவடைந்தகையுடன் தெற்கை தளமாக கொண்டு சில ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் அங்குள்ள மக்களுக்கு தொழில்வழங்க முன்வந்தபோது அதனை கொச்சப்படுத்தி , அதற்கு பல்வேறுபட்ட தீய முலாம்கள் பூசி மக்களை குளப்பினர். இதன்நோக்கம் யாதெனில் மக்களின் அவலத்திலேயே தாம் நல்வாழ்வு வாழமுடியும் என்ற அவர்களின் அசையாத நம்பிக்கையாகும்.
இவ்வாறு புலம்பெயர் புலிப்பினாமிகள் இந்மக்களின் வாழ்வினை சீர்கெடுக்க மேற்கொள்ளுகின்ற செயல்களை அடுக்கினால் பக்கங்கள் நீண்டுகொண்டே செல்லும், பக்கங்களை நீட்டுவதை பார்கிலும் கீழே உள்ள இரு படங்கள் மூலம் உங்கள் சிந்தனையை தூண்டலாம் என நம்புகின்றேன்.
15ம் திகதி லண்டனில் கூடிய நாடுகடந்த புலிகள் மக்களிடம் வசூலிப்பதற்கு தயாரித்துள்ள விலையுயர்ந்த உண்டியல்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்ணொருவர் நிதியுதவி வழங்கும் புகைப்படம், இப்பெண்மணி இவ்வளவு பணத்தையும் இலங்கையிலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கினால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய இவ்வாறான தற்கொலைகளை தவிர்க முடியுமா?
0 comments :
Post a Comment