Thursday, January 26, 2012

Google இன் தனியுரிமை கொள்கையில் மாற்றம்

நாம் ஒரு இணையதளத்திற்கு செல்லும்போது நம்மைப் பற்றி எந்த தகவல்களை அந்த இணையதளம் சேகரிக்கிறது? அவ்வாறு சேகரிக்கும் தகவல்களை அது எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பதை அந்த தளம் அவசியம் தெரிவிக்க வேண்டும். அது தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) எனப்படும். பொதுவாக மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் கணக்கு தொடங்கும் போதே தனியுரிமைக் கொள்கைகளை அது காட்டும்.

ஆனால் அது பக்கம் பக்கமாக இருப்பதால் நாம் யாரும் அதனை படிப்பதில்லை.
கூகுள் நிறுவனம் (ஜிமெயில், ப்ளாக்கர், யூட்யூப் உள்பட) தனது அறுபதுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு தனித்தனி தனியுரிமைக் கொள்கைகளை வைத்துள்ளது. அதனை வரும் மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரே தனியுரிமைக் கொள்கையாக மாற்றவுள்ளது.

இந்த மாற்றத்தின்படி நீங்கள் பல்வேறு கூகுள் தயாரிப்புகளை பயன்படுத்தினாலும் ஒரே பயனாளராகத் தான் பார்க்கப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கூகுள் தயாரிப்புகளின் தகவல்களை ஒன்றிணைத்து உங்களின் கூகுள் கணக்கில் (Google Account) சேமித்து வைக்கிறது. பிறகு வேறொரு சமயத்தில் நீங்கள் மற்ற கூகுள் தயாரிப்புகளை உபயோகப்படுத்தும் போது தான் சேமித்து வைத்த தகவல்களை பயன்படுத்தும்.

அதாவது நீங்கள் (கூகிள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது) கூகுள் தேடுபொறியில் மொபைல்கள் பற்றி தேடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பிறகு நீங்கள் ஜிமெயில் அல்லது யூட்யூப் பயன்படுத்தும் போது அங்கே மொபைல்கள் தொடர்பான விளம்பரங்களை காட்டும்.

இது போல உங்களுக்கு வரும் மெயில்கள், நீங்கள் கூகுள் ப்ளஸ் தளத்தில் பகிரும் பகிர்வுகள், யூட்யூப், கூகுள் தளங்களில் தேடுபவற்றிற்கு தொடர்பான விளம்பரங்களைக் காட்டும்.

இது பற்றி கூகிள் வெளியிட்டுள்ள வீடியோ:



இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே விளம்பரங்கள் தான். பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விளம்பரங்களை கொடுப்பதற்காகவே இந்த மாற்றங்களை செய்துள்ளது. உங்களைப் பற்றி கூகுள் சேமித்து வைத்துள்ள தகவல்களைக் காண https://www.google.com/dashboard/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்.

இந்த மாற்றங்களின் மூலம் உங்கள் இருப்பிடம், மொபைல் எண், உங்கள் விருப்பங்கள் உள்பட உங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இனி கூகுள் அறிந்துக் கொள்ளும். விளம்பரங்களுக்காக இந்த தகவல்களை கூகுள் பயன்படுத்தினாலும் இத்தகவல்களை விளம்பரதாரர்களிடம் கொடுக்க மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://www.google.com/policies/

ஆக்கம்: அப்துல் பட்ஷித்

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com