Thursday, January 19, 2012

வட மாகாண மக்களை ஏமாற்றி பணம் பெற்றுவந்த பெண் ஒருவர் கைது.

முன்னாள் புலிகளை விடுவித்து தருவதாக கூறி யாழ் வட மாகாண மக்களிடம் பணம் பெற்றுவந்து கும்பல் ஒன்றைச் சேர்ந்த பெண்ணொருவரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு, கைது செய்ததை தொடர்ந்து, இக்கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண், ஜா-எல, மாகேவிட்ட பகுதியை சேர்ந்தவரென, குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றர். குற்றப்புலனாய்வு திணைககள அதிகாரிகள் என்ற போர்வையில், முல்லைத்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அப்பகுதியில் உள்ள ஒருசிலரின் பெயர்கள் மற்றும் உறவினர்களின் தகவல்களை பெற்று, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களில் உள்ள காணாமல் போனோரை தேடி தருவதாக கூறி, அவர்களின் உறவினர்களிடமிருந்து பெரும் பணத்தை தமது வங்கிக்கணக்கில் வைப்பிலிடுமாறு, கோரியுள்ளதாக, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பயன்படுத்திய செல்லிட தொலைபேசியொன்றும், 4 சிம் அட்டைகளும், கப்பம் பெற்ற பணத்தை வைப்பிலிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் கணக்குகளுக்கு வங்கியில் வைப்பிலிடப்பட்ட சிட்டைகளும், பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment