வீரப்பனை இழிவுபடுத்தும் வனயுத்தத்தை தடை செய்ய வேண்டும்! - மனைவிமுத்துலட்சுமி
வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் வனயுத்தம் படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். குப்பி படத்தை இயக்கிய ஏஎம்ஆர் ரமேஷ், வன யுத்தம் என்ற பெயரில் சந்தனக்காட்டு வீரப்பன் வாழ்க்கைக் கதையை படமாக்கி வருகிறார். இந்தப் படம் தனது அனுமதி இல்லாமல், தப்புத் தப்பான தகவல்களுடன் தயாராகி வருவதாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வனயுத்தம் படம் ஒரு மோசடியான வேலை. வீரப்பன் எனது கணவர். அவரைப் பற்றிய படத்தை எடுக்கும் இயக்குநர் ரமேஷ், குறைந்தபட்சம் எனது சம்மதம் கூட கேட்காமல் வீரப்பன் பற்றி வன யுத்தம் படத்தை எடுத்து வருகிறார்.
இந்தப் படம் தொடர்பாக 2 முறை என்னை சந்தித்து பேசியதாகவும் பொய்யான தகவல்களை அவர் பரப்பி வருகிறார். மேலும் பழ.நெடுமாறன், இயக்குநர்ர் கவுதமன், கொளத்தூர் மணி ஆகியோரை சந்தித்து தகவல்களை திரட்டியதாகவும் கூறி வருகிறார்.
இதில் துளி அளவுகூட உண்மை இல்லை. எனது கணவரை வைத்து சினிமா எடுத்து சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ரமேஷ் செயல்படுகிறார். எனவே இந்த படத்தை தயாரிப்பவர்கள் இதற்கு துணை போகவேண்டாம். எனது வேடத்தில் நடிக்கும் நடிகை அரைகுறை ஆடையுடன் வருவது போலவும் படத்தில் காட்சிகள் இடம் பெறுகின்றன.
எனது கணவர் பற்றிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவரை பற்றி பொய்யான தகவல்களுடன் வெளிவரும் இதுபோன்ற படங்கள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். எனவே எனது கணவரை காட்டுக் கொள்ளையன்போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள வன யுத்தம் படத்தை தடை செய்யவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நான் வழக்கும் தொடர்ந்துள்ளேன்," என்றார்.
0 comments :
Post a Comment