Saturday, January 28, 2012

பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளுமாறு புனர்வாழ்வு பெற்ற புலிகளுக்கு அழைப்பு.

இலங்கையில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளுமாறு புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ள முன்னாள் புலிகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. உரிய கல்வித்தகமைகள் மற்றும் ஏனைய தகுதிகளைக் கொண்டவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்க்பபட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு அரசாங்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

காவல்துறையில் இணைந்து சேவையாற்ற விரும்பும் முன்னாள் புலிகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தனராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் புலிகளை உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தகமைகளும், விருப்பமும் உடைய முன்னாள் போராளிகள்காவல்துறையில் இணைந்து கொள்ளத் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸ் திணைக்களத்தில் காண்ஸ்டபிள் ஒருவருக்கான அடிப்படைத்தகமையாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மொழி, கணிதத்துடன் ஆறு பாடங்களில் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில் சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் கணிதம் , மொழி ஆகியவற்றில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

14 வயதிலிருந்து புலிகளுடன் இணைந்தவர்களும், பலவந்தமாக இணைக்கப்பட்டவர்களுமே இவ்வாறு புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் மேற்படி கல்வித் தகமையை கொண்டிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com