Monday, January 30, 2012

சிரியாவில் முற்றுகிறது கலவரம்: ராணுவத் தாக்குதல் அதிகரிப்பு!

சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு நிலவரத்தைப் பார்வை யிட்டு வந்த பிரதிநிதிகள் குழுவை, அரபு லீக் திரும்பப் பெற்றுள்ளது.

11 மாதங்களாக...:
சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, ராணுவம் தாக்குதல் நடத்தவே, படிப்படியாக ராணுவ வீரர்கள் பலர், அங்கிருந்து பிரிந்து, எதிர்க் கட்சிகளுடன் இணைந்தனர்.பிரிந்த ராணுவ வீரர்கள், சிரியா விடுதலை ராணுவம் என்ற எதிர்த்தரப்பு ராணுவத்தை உருவாக்கினர். அதிபரின் ராணுவத்திற்கு, இந்த புதிய ராணுவம் மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது.

அரபு லீக் குழு:
சிரியாவில் அமைதியை நிலைநாட்ட, அரபு லீக் சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி முதல், அரபு லீக் சார்பில், 165 பிரதிநிதிகள் கொண்ட குழு, சிரியாவில் நிலவரத்தை நேரில் பார்வையிட்டது.ஆனால், இக்குழு வந்த பின், மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தது. அதனால், அதிபர் அசாத், தனது பொறுப்புகளை துணை அதிபரிடம் ஒப்படைத்து விட்டு, பதவி விலக வேண்டும் என, அரபு லீக் கோரிக்கை விடுத்தது.

சவுதியின் அதிரடி:
இதற்கு மறுப்பு தெரிவித்த சிரியா, அரபு லீக்கில் உள்ள சில நாடுகள், அன்னிய நாடுகளின் கைப்பா வையாகி விட்டதாக குற்றம் சாட்டியது. இதனால், அரபு லீக்கில் உள்ள சவுதி அரேபியாவும் கத்தாரும், சிரியா குழுவில் இருந்து, தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற்றன.

குழு வாபஸ்:
அரபு லீக்கில் செல்வாக்கு மிகுந்த, சவுதியின் இந்த முடிவை அடுத்து, அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கலந்தாலோசித்தனர். இதையடுத்து, சிரியாவில் இருந்து அரபு லீக், தனது பிரதிநிதிகள் குழுவை, முழுமையாகத் திரும் பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த நான்கு நாட்களில் மட்டும், 200 பேர் அதிபர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வலியுறுத்தல்:
அதே நேரம், அதிபர் அசாத்தை பதவி இறங்கும்படி வலியுறுத்தவும், அவரிடம் இருந்து, அந்நாட்டு மக்களை காப்பாற்றவும், நெருக்கடி கொடுக்கும்படி, அமெரிக்காவிடம் வலியுறுத்த, சிரியாவின் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பான சிரியா தேசிய கவுன்சில் தலைவர், விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக, அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.சிரியாவில் நடக்கும் வன்முறைகளை, உடனடியாக நிறுத்த, சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என, வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கி வலியுறுத்தியுள்ளன.

முழுவீச்சில் ராணுவம்:
இந்நிலையில், சிரியாவின் புறநகர்ப் பகுதிகளை, நேற்று முன்தினம் எதிர்த்தரப்பு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து, அப்பகுதிகளில் அன்றைய தினமே, அதிபர் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன.

ஐ.நா.,வில் நாளை:
இதற்கிடையில், அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இத்தீர்மானம், சிரியாவில் வெளிநாட்டுத் தலையீடுகளை நிறுத்த வகை செய்யா ததால், ஆதரிக்க முடியாது என, ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இத்தீர்மானத்தின் அவசியம் குறித்து, நாளை அரபு லீக் தலைவர் நபீல் அல் அரபி பேச உள்ளார். ரஷ்ய அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை கைவிடும்படி, அவர்களிடம் நேரடியாக அரபி பேசி வருகிறார்.

No comments:

Post a Comment