சிறுபான்மையினருக்கு தீர்வு வழங்க செனற் சபையை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செனற் சபை ஒன்று அமைக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிர்வாக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செனற் சபை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை செனற் சபையில் உள்வாங்குவதன் மூலம் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க முடியும் எனவும் பாராளுமன்றில் நாடு தொடர்பான அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும் வகையில் இந்த செனற் சபை உருவாக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பு கோரும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலகில் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறந்த ஜனநாயகம் நிலவுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ´பிதட்டிக்´ கொண்டார்.
0 comments :
Post a Comment