Tuesday, January 17, 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை

நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று காலை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தமிழர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டியதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பாலான அரசியல் தீர்வு தொடர்பிலான அணுகுமுறையில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனக்கு உறுதியிளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடாந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்வதாக பல தடவைகள் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஏற்ட்டப்படும் என இந்தியா நம்புகி;ன்றது.

பல சிறந்த முன்மொழிவுகளை கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்பட்டால் அது தேசிய நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்மாதிரியாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதேபோன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸுடனான சந்திப்பின் போது வர்த்தக, முதலீட்டு மற்றும அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. இலங்கையின் முதலீடு மற்றும் சுற்றுல்லா ஆகியவற்றில் இந்தியா முன்னிலையில் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் முன்னுரிமைக்கிணங்கவே இந்தியாவின் அபிவிருத்திக்கான உதவி திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் வீடமைப்பு, சுகாதராம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான தனிப்பட்ட உறவு இரு தரப்பு உறவை விரிவடைய செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரி மாளிகையில் தை பொங்கள் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை நடைபெறவிருந்தது.

எனினும் நானும் அந்நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அந்நிகழ்வு மாலை மாற்றப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்குமான உறவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமான இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் புவியியல் மற்றும் கலாசார ரீதியாக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து செயற்பட்டு உதவி உள்ளிட்ட தேவையான அனைத்தையும் விடயங்களையும் வழங்கும்.

இதேவேளை, நாளை வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளித்தல், பாடசாலையொன்றை மீள திறத்தல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு 10,000 துவிச்சக்கர வண்டிகள் கையளித்தல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளேன்.

இதற்கு மேலதிகமாக உள்நாட்டில் இடம்பெயந்தோருக்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 1,000 வீடுகள் கையளிப்பு நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன் என்றார்.

இதற்கிடையில், இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com